டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றப் பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஆற்றிய உரை; பேரவைத் தலைவர் அவர்களே, மதுரை, மேலூர். அரிட்டாப்பட்டி பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் குறித்து உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களையும், கவலைகளையும் இங்கே தெரிவித்து அரசினுடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். நான் தொடக்கத்திலே ஒன்றை தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலகட்டத்தில் அந்த சுரங்கத்தை எந்தவொரு காலகட்டத்திலும் நிச்சயமாக அங்கே அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னவர்தான் நம்முடைய முதலமைச்சராக இங்கே வீற்றிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் . அது மாத்திரம் அல்ல; அமைக்க மாட்டேன் என்று சொன்னது மாத்திரமல்ல; தான் முதலமைச்சராக இருக்கின்ற வரையில் அங்கே அந்த டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டோமென்று நெஞ்சுரத்தோடு இந்த அவையிலே அறிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.

அறிவித்ததோடு மாத்திரமல்லாமல், இங்கே உறுப்பினர்களெல்லாம் சுட்டிக்காட்டியதைப்போல, அனைவருடைய ஒத்துழைப்போடு ஏகமனதாக இந்தச் சட்டமன்றத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, ஒன்றிய அரசினுடைய ஒப்புதலுக்காக நம்முடைய முதலமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் இங்கே உங்களிடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், அதற்காக இந்தப் பிரச்சினையினுடைய நதிமூலம் என்ன, இந்தப் பிரச்சினையினுடைய ரிஷிமூலம் என்ன, இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் யார், இந்தப் பிரச்சினைக்கு முழுமுதல் காரணம் யார் என்பதை நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களென்று சொன்னால், இங்கே ராஜன் செல்லப்பா வேகமாகப் பேசினார்கள். அவரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் யார் மூல காரணம் தெரியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக-வினுடைய மாநிலங்களவை உறுப்பினர் அன்றைக்கு மாநிலங்களவையிலேயே, அவர் அந்த மாநிலங்களவையில் இந்தப் பிரச்சினை வருகிறபோது, அவர் அந்த strategic minerals எல்லாமே, … strategic minerals ஒரு மாநில அரசினுடைய ஒப்புதலைப்பெற்று, மாநில அரசாங்கம்தான் இத்தகைய சில குறிப்பிட்ட கனிம வளங்களை ஏலம் விடலாம் என்கின்ற முறையை மாற்றி, இவற்றையெல்லாம் strategic minerals என்கின்ற அந்த வட்டத்திற்குள்ளே அடைத்து, அதை ஏலம் விடக்கூடிய அந்த முறையை ஒன்றிய அரசு தன்னுடைய கையிலே எடுத்துக்கொள்ளக்கூடிய அந்த சூழ்நிலையில் அந்தச் சட்டம் அங்கே கொண்டுவருகிறபோது, அதை நீங்கள் ஆதரித்து உங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்த அந்தக் காரணம்தான் இந்த டங்ஸ்டன் சுரங்கம் மூல முதல் காரணம்.

அந்த மூல முதல் காரணத்தை நீங்கள் ஆரம்பித்தீர்கள். உங்களுடைய உறுப்பினர் தமிழ்நாடு அரசைப்பற்றி அவர் குற்றச்சாட்டைச் சொல்கிறபோது நான் அதற்கு என்னுடைய பதிலைச் சொல்ல வேண்டும். இந்தக் காரணம் எங்கே இருந்து துவங்கியிருக்கிறது என்பதை நான் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமையும், அவசியமுமென்று நான் கருதுகிறேன். எனவே, நீங்கள் அப்போது ஆதரித்ததற்குப்பிறகு, ஒன்றிய அரசு இந்த strategic minerals என்று அதைக் கொண்டுவந்து, இதை ஏலமிடுவதற்கு முயற்சித்தபோது, அப்போதே அதை ஒத்துக்கொள்ளாமல், அதை எதிர்த்த அரசு தமிழ்நாடு அரசு கனிம வளத் துறை அன்றைக்கே அதை எதிர்த்திருக்கிறது. அதற்குப் பின்னாலுங்கூட, ஏலத்தைவிட்டு, ஏல நடைமுறைகளை ஆரம்பித்து, எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்து, ஏலதாரர் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் Hindustan Zinc Limited என்ற அந்தக் கம்பெனிக்கு ஏலம் கொடுக்கிறபோதும், அந்த ஏலத்தை கொடுத்தபோதும், அதை எதிர்த்த அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு.

எனவே, திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லா வகையிலும், எல்லா முறைகளிலும் அதை நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம் என்பதனை எந்தவிதத்திலும் ஒரு மாற்றுக் கருத்தை உங்களால் சொல்ல முடியாது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்குப் பிறகுதான், சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டுவந்தோம். சட்டமன்றத்திலே ஒருமுகமாக தீர்மானம் கொண்டுவந்து, நாம் எல்லாம் நிறைவேற்றியதற்குப்பிறகும்கூட, இங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதிலே அரசியல் ஆதாயம் செய்வதற்காக இன்றைக்கு நீங்கள் அதிலே குளிர்காய நினைக்கிறீர்கள் என்பதை நான் திட்டவட்டமாக உங்களிடத்திலே தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் : பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் தீர்மானத்தை ஆதரித்தது உண்மைதான். அதற்காக நன்றி சொல்கிறோம். அதை மறுக்கவில்லை.ஆனால், அமைச்சர் சொல்வது, நீங்கள் இதே பிரச்சினையை உங்கள் உறுப்பினர் இங்கே பேசுகிறபோது, இந்தப் பிரச்சினையிலே ஆட்சிக்கு மக்களிடத்திலே மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது; நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் பேசினார். அதனால்தான் பதில் சொல்லவேண்டிய அவசியம் நம்முடைய அமைச்சருக்கு வந்திருக்கிறது. அதனால், அவர் பேசுகிறபோது, உங்களுடைய உறுப்பினர் மாநிலங்களவையிலே என்ன பேசினார்? அதுதான் கேள்வி, அதைச் சொல்கிறார். அதை இல்லையென்று சொல்கிறீர்களா? மறுக்கிறீர்களா? ஆதாரத்தோடு நான் சபாநாயகரிடத்தில் கொடுக்கிறேன். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம். உங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தம்பிதுரை நாடாளுமன்ற அவையிலே ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது உண்மை, இல்லையென்று மறுக்கிறீர்களா? தி.மு.க.-வின் சார்பில் நாங்கள் இதை எதிர்த்திருக்கிறோம், ஆதரிக்கவில்லை. ஆனால் உங்கள் உறுப்பினர், உங்களுடைய அ.தி.மு.க.-வைச் சார்ந்த உறுப்பினர் ஆதரித்துப் பேசியிருக்கிறார். அது உண்டா, இல்லையா? அதற்குப் பதில் சொல்லுங்கள்.

அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு: பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க் கட்சித் துணைத் தலைவரே, ஒற்றை உறுப்பினர் எங்களுக்கு இருந்தாலும் நாங்கள் உறுதியாக இந்தத் திட்டத்தை ஆதரிப்போம் என்கின்ற வகையிலே மாநிலங்களவையில் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள். அதை உங்களால் மறுக்க முடியாது. அதை உங்களால் மறுக்க முடியாது. முதலமைச்சர் என்ன சொன்னார்கள் என்றால், ‘என்னுடைய ஆதாரத்தையும் speaker இடம் தருகிறேன், உங்கள் ஆதாரத்தையும் கொடுங்கள்’ என்று சொன்னார்கள். அவற்றைத் தாருங்கள், முடிவு செய்துவிடுவோம். மாநிலங்களின் உரிமையாக இருந்த ஒன்றை, ஒன்றிய அரசு தன்னுடைய பொறுப்பிலே ஏற்றுக்கொண்டு, ‘நாங்கள் அந்த ஏல முறையைக் கொண்டுவருவோம், மாநில அரசுக்கு அதில் பங்கு இல்லை, strategic minerals-அரிய வகை கனிம வளங்கள் இனிமேல் எங்களுடைய பாத்தியதை, நாங்கள்தான் கொண்டுவருவோம்’ என்று மாநில உரிமைகளையும் மீறி, ஒன்றிய அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டபோது, அதை நீங்கள் ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் ஆக இன்றைக்கு வந்திருக்கிறது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. I am coming to the point again. ஆனால், நாம் இங்கே தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகும், ஒன்றிய அரசு என்ன சொன்னது? நாங்கள் இதை Geological Survey of India-வினுடைய கவனத்திற்குக் கொண்டுசெல்கிறோம் என்று சொன்னார்கள்.

நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் போராட்டம் நடத்தக்கூடிய நண்பர்கள், நம்முடைய பிரதான எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள்? ஒன்றிய அரசைக் கண்டித்து, நீங்கள் ஒரு வார்த்தை அறிக்கையில் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அதை விட்டு, விட்டு, மரியாதைக்குரிய உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவையில் சொல்கிறார்கள், தமிழ்நாடு அரசை பற்றி இங்கு குறைகூறுவதாகச் சொன்னால், இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், இது யாருடைய கூட்டணிக்கு பின்னாலே இருந்துகொண்டு, நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) நான் அந்த வார்த்தையைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஒன்றிய அரசை நீங்கள் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசு, அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் அங்கே போராட்டம் நடத்துகிறபோது, அந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

இன்னும் ஒருபடி மேலே போய், அங்கே இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு அங்கே எந்தவிதமான ஓர் அசம்பாவிதமும் நடந்துவிடாத அளவில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இங்கேகூட உறுப்பினர் திரு. வேல்முருகன் சொன்னார்கள் என்று கருதுகிறேன். எந்த அளவிற்கு அவர்களுக்கு அங்கே பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ தமிழ்நாடு அரசு இதற்கு எந்தவிதமான அனுமதியும் கொடுக்கவில்லை என்று நீங்கள் அறிக்கை விடுகிறீர்கள் என்று சொன்னால், இங்கேதான் இருக்கிறது உங்களுடைய உண்மையான சொரூபம். நான், மீண்டும் இந்த அவையில் திட்டவட்டமாக உங்களிடத்தில் சொல்கிறேன், இந்த அவையின் மூலமாக நாட்டு மக்களுக்கும் சரி, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் சரி, நான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அரசின் சார்பில் சொல்வேன், தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவே வழங்காது. இந்தத் திட்டத்தை வரவே விடமாட்டோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால், நம்முடைய முதலமைச்சர் , முதலமைச்சராக இருக்கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்.

நம்முடைய முதலமைச்சர் , முதலமைச்சராக இருக்கிற வரை ஒரு பிடி மண்ணைக்கூட (மேசையைத் தட்டும் ஒலி) அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக அனுமதிக்காது என்பதை நான் இங்கே திட்டவட்டமாக உங்களிடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கேயெல்லாம் முகக் கவசம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களே, இந்த முகக் கவசம் எதற்காகப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இந்த முகக் கவசத்தை உங்கள் முகங்களிலே அணிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி, நான் அமைகிறேன் என பேசியுள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: