என்ன ஒரு பிரார்த்தனை!

‘மிஷ்காத்’ என்பது புகழ் பெற்ற நபிமொழித் தொகுப்பு நூல்களில் ஒன்று. இந்த நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு – “பிரார்த்தனைகள்.” இந்த அத்தியாயத்தை வாசித்தால் தெரியும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வோடு துஆ – இறைஞ்சுதல் பின்னிப் பிணைந்துள்ளதை. ஆம். காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை – ஏன், படுக்கையில் மனைவியுடன் இல்லற உறவில் ஈடுபடும்போதுகூட – ஓத வேண்டிய பிரார்த்தனைகளை அழகாகக் கற்றுத் தருகிறது இந்த அத்தியாயம். இதயத்தை உருக வைக்கும் ஒரு நிகழ்வு…

தோழர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு விடுகிறார். இந்த செய்தி அறிந்த இறைத்தூதர்(ஸல்) அவரை நலம் விசாரித்துவரப் புறப்படுகிறார். நோயாளியின் நிலைமை சொல்லுந்தரமாய் இல்லை. கோழிக்குஞ்சு போல் மெலிந்து உடல் நலிந்து காணப்பட்டார். நபிகளார்(ஸல்) அவரிடம், “நீ ஏதேனும் பிரார்த்தனை செய்து வந்தாயா? இறைவனிடம் உருக்கமாக எதையேனும் வேண்டுதல் வைத்தாயா?” என்று கேட்டார்.

“ஆம்” என்றார் அந்த நோயாளி.
“என்ன வேண்டுதல்?”
“இறைவா, நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டியே இந்த உலகிலேயே எனக்குத் தந்துவிடு” என்று இறைஞ்சி வந்தேன்” என அந்த நோயாளி கூறினார்.

இதைக் கேட்டதும் இறைத்தூதர் தம் வியப்பை வெளிப்படுத்தும் வகையில் “சுப்ஹானல்லாஹ்(இறைவன் தூயவன்)” என்றார். பிறகு அவரைப் பார்த்து, “உன்னால் அதைத் தாங்க இயலாது. இனிமேல் பின்வருமாறு பிரார்த்தனை செய்” என்று அறிவுறுத்தினார்.

“இறைவா, இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.” அதன் பிறகு அந்த நோயாளி நலம் பெறுவதற்காக இறைத்தூதர்(ஸல்) இறைவனிடம் பிரார்த்திக்க, இறைவனும் நலிவு நீக்கி நலத்தைத் தந்தருளினான்.(மிஷ்காத், நபிமொழி எண்-2502)

இந்த இடத்தில் நபிகளாரின் யதார்த்த நடைமுறையைக் கவனிக்க வேண்டும்.

“மறுமையின் தண்டனையை முன்கூட்டி இந்த உலகிலேயே தந்துவிடு” என்று இறைஞ்சியவரை ‘ஆஹா… எவ்வளவு பெரிய பக்திமான்’ என்றெல்லாம் இறைத்தூதர் பாராட்டவில்லை.

“அதை உன்னால் தாங்க முடியாது. இனிமேல் அவ்வாறு இறைஞ்சாதே” என்று கண்டிக்கிறார். மாற்று இறைஞ்சுதலையும் கற்றுத்தருகிறார். ஆம்.. அவர்தாம் திருநபி(ஸல்).

பக்திசார்ந்த செயல்பாடாகவே இருந்தாலும், அதிலும் வரம்பு மீறுதல் கூடாது எனும் அழகிய பாடத்தைக் கருணை நபி(ஸல்) நமக்குக் கற்றுத்தந்துள்ளார். இந்த ஒன்பதாம் அத்தியாயத்தை ஒரே வரியில் இப்படிச் சொல்லலாம் “இறைஞ்சுதல் எனும் பெருங்கடல்.”

தொகுப்பு: சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

சிலர், “எங்கள் இறைவனே, உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்துவிடு” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் இல்லை.(குர்ஆன் 2:200)

The post என்ன ஒரு பிரார்த்தனை! appeared first on Dinakaran.

Related Stories: