இச்செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜென்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜ கள்ளக் கூட்டணியை கண்டித்து ஜனவரி 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், கிரிராஜன், கனிமொழி சோமு, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அரவிந்த் ரமேஷ், ஐட்ரீம் மூர்த்தி, ஜெ.கருணாநிதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு,
திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், ஏழுமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ேக.நகர் தனசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தி.நகர் பி.சக்திவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும். நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. அதற்கும் இடம் இருக்கிறது. தமிழ்நாட்டை, தமிழ் மக்களின் உணர்வுகளை, எங்கள் சுயமரியாதையை அவமானப்படுத்தி கொண்டே இருப்பீர்கள், நாங்கள் ஒவ்வொரு நாளும் இதை பார்த்து கொண்டே இருப்போம் என்றும் நினைக்க வேண்டாம். திமுகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் அரணாக நின்று தமிழக உரிமைகளை பாதுகாப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் வந்து பிரச்னையை கிளப்பி வருகிறார். ஆளுநர் பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப். எனவே நீங்கள் வீட்டில் இருங்கள். ஏதாவது திறப்பு விழாவுக்கோ, நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் செல்லுங்கள். என்ன பேச வேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தயாநிதி மாறன் எம்பி பேசுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் எதிர்க்கிறாராம். ஒன்னும் இங்கே பண்ண முடியாது. விட்டுருவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு பத்திரிகை செய்தி என்ன.
மகாராஷ்டிராவில் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவை விட பாதிதான். உற்பத்தி திறன் மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு தான் அதிகம். காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின். எங்களுடைய தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு வந்து விட்டால் எங்கள் முதல்வர், எங்கள் அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதை தான் நீங்கள் செய்ய வேண்டும். எப்படியாவது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானம்படுத்துவீங்களா…
இதை மாதிரி தொடர்ந்து செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார். இதே போல, காஞ்சிபுரத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தர், எம்பி செல்வம் தலைமையிலும், திருவள்ளூரில் திருத்தணி பூபதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
* தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.
* ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
The post தமிழ்நாட்டை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.