மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பையும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானத்தையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: மன்மாகன் சிங், 2004-2014 வரை பிரதமராக பொறுப்பேற்று, இந்திய பொருளாதார சீர்திருத்தத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார். சிறப்புமிகு திட்டங்களை தமிழகத்தின் வளர்ச்சிக்காக தந்தவர்.

ஒன்றிய நிதித்துறை அமைச்சராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், மத்திய நிதிக்குழு தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மாதம் 14ம் தேதி மறைந்தார். அவர், பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். 1985-1988ம் ஆண்டுகளில் சத்தியமங்கலம் தொகுதியில் இருந்தும், 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்தும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றியவர்.

2004-2009ம் ஆண்டுகளில் கோபிசெட்டிபாளையம் மக்களவை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். அன்புடன் பழகும் பண்பாலும், திறம்பட பணியாற்றும் பாங்கினாலும் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். தமிழ்மொழி ராஜதத்தன், மேல்மலையனூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டத்தக்க வகையில் பணியாற்றினார். அவரின் மறைவு குறித்து இந்த பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் கொள்கிறது.

அவர்களை இழந்துவாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இந்த பேரவை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து, மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சட்டப்பேரவையில் இருந்த அனைவரும், சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சில நொடிகள் அமைதியாக எழுந்து நின்று மவுனஅஞ்சலி செலுத்தினர். இந்த இரங்கல் நிகழ்வை தொடர்ந்து, நேற்றைய அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. நேற்றைய கூட்டம் 5 நிமிடத்தில் முடிந்தது. மீண்டும் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.

The post மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: