தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரால், பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி, பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுஜிசியின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள உயர்கல்வி கட்டமைப்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) பொதுச் செயலாளர் பாலமுருகன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது: தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநரால், பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தனித்தனி சாசன விதிகள் வகுக்கப்பட்டு, தமிழக சட்டமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் நியமனங்கள் நடைபெற வேண்டும்.
ஆனால், ஒன்றிய அரசு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்டு, இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நாட்டிலேயே உயர்கல்வி கட்டமைப்பில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. இதனை சீர்குலைக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பு உள்ளது. துணைவேந்தர் நியமனம் மட்டுமின்றி, பேராசிரியர் உள்ளிட்ட பிற பணியாளர்கள் நியமனத்தில் தலையீடு, இடஒதுக்கீடு விவகாரத்தில் நுழைவது என பல்வேறு பாதகமான அம்சங்கள், தற்போதைய யுஜிசியின் வழிகாட்டுதல்களில் உள்ளன.
இதனை முழுமையாக ஆராய்ந்தால், ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவது தெரியவரும். மாணவர்களின் நலன் பாதிக்கப்படாதவாறு, ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும். புதிதாக ஆளுநர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களை திரட்டி, சென்னையில் மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
* கல்வி நிறுவனங்களுக்கு மறைமுக மிரட்டல்
பல்கலைக்கழகங்களின் சாசன விதி மற்றும் மாநில அரசின் கொள்கைகளை சிதைக்கும் வகையில் தற்போதைய பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பு உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதன் கட்டமைப்பு, பணியாளர் ஊதியம் உள்ளிட்டவற்றிற்கு ஆண்டுக்கு தலா ரூ.6 கோடி முதல் ரூ.30 கோடி வரை, தமிழக அரசுதான் வழங்கி வருகிறது. அதேசமயம், கடந்த 2012க்கு பிறகு மானியக்குழு எந்தவித நிதியையும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கவில்லை.
முழுக்க, முழுக்க மாநில அரசு கட்டிக்காத்து வரும் உயர்கல்வி நிறுவனங்களில், ஒன்றிய அரசின் கொள்கைகளை திணிப்பது கேலிக்கூத்தானது. மேலும், இதனை பின்பற்றாவிட்டால், யுஜிசி அங்கீகாரம் ரத்து, பாடம் நடத்த முடியாது, தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க முடியாது என்பது போன்ற மிரட்டல்களை மறைமுகமாக மானியக்குழு விடுத்துள்ளது. எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் உயர்கல்வி கட்டமைப்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கை: பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.