அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு: 500 பேருக்கு இலவச ஹெல்மெட்

பெரம்பூர்: பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கரூரைச் சேர்ந்த கிராமியம் அறக்கட்டளை மற்றும் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினர். குக்ஸ் ரோடு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பெரம்பூர் பள்ளி சாலையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் என சுமார் 500 மாணவ, மாணவியருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. பொதுவாக பெற்றோருடன் செல்லும் குழந்தைகளுக்கு பெரும்பாலான பெற்றோர் தனியாக ஹெல்மெட் வாங்கி பயன்படுத்துவது இல்லை.

அவ்வாறு சாலையில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு குழந்தைகளுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஹெல்மெட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராமியம் அறக்கட்டளையின் தலைவர் நாராயணன், இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் தலைவர் சித்ரா, இந்திய சமூக நல வாழ்வு நிறுவன செயலாளர் ஹரிஹரன், செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

 

The post அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு: 500 பேருக்கு இலவச ஹெல்மெட் appeared first on Dinakaran.

Related Stories: