கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் சுற்றுலா வந்த வெளிநாட்டினர்


கன்னியாகுமரி: சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 17 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டினர் பங்குபெற்ற ஆட்டோ ரிக் ஷா சேலஞ்சு என்ற சுற்றுலா பயணம் கடந்த 28-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் அமெரிக்க ஆஸ்திரேலியா, சுவிட் ர்லாந்து, அயர்லாந்து உள்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆட்டோக்களில் பல அணிகளாக பிரிந்து புறப்பட்டனர். அவர்களாகவே ஆட்டோக்களை ஓட்டி சென்று சுற்றுலாத்தலங்களை பார்த்தனர். சென்னையில் இருந்து புறப்பட்ட இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி வழியாக நேற்றுமுன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தனர். மொத்தம் உள்ள 1200 கிலோ மீட்டர் தூரத்தை 9 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வந்த வெளிநாட்டினருக்கு தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி சங்கு மாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகம் இட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெளிநாட்டினர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர். இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கினர். பின்னர் அவர்கள் நேற்று காலை 8 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து 9 ஆட்டோக்களில் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டு சென்றனர். அங்கு இருந்து விமானம் மூலம் அவர்கள் அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

The post கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் appeared first on Dinakaran.

Related Stories: