வெள்ளமடம் தென்கரை குளத்தில் 10 ஷட்டர்கள் பழுதால் வீணாக வெளியேறும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை


ஸ்ரீவைகுண்டம்: தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் வாய்க்கால்கள் மற்றும் மருதூர் அணையின் கீழ் கீழகால், மேலகால் என இரு வாய்க்கால்கள் மூலம் 53 குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பெரும்பாலான குளங்கள் தூர்ந்து போயுள்ள நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, வெள்ளத்தில் பெரும்பாலான குளங்கள் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மருதூர் மேலகால் மூலம் பாசன வசதி பெறும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தென்கரை குளத்தின் கரை உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குளத்தில் சீரமைப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டனர். ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தென்கரைக் குளம் மறுகால் சீரமைப்பு, மடை கட்டுதல், கரை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தென்கரை குளத்தில் உள்ள 10 ஷட்டர்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. குளத்தின் கரையில் உள்ள கற்களில் விரிசல் ஏற்பட்டு அதன் மூலமும் அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது. கடந்தாண்டு சாகுபடி செய்ய முடியாத நிலையில் தற்போது குளத்தில் நீரிருப்பை பொறுத்து நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மார்ச் 31 வரை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வீணாக தண்ணீர் வெளியேறுவதால் அறுவடை நேரத்தில் தேவையான தண்ணீர் இருப்பில் இல்லாத சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்கரை குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரஜினி கூறுகையில், தென்கரை குளம் சீரமைப்பு பணிகள் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. 2.5 கிலோமீட்டர் தூரம் வெள்ளத் தடுப்பு பணிகள் நடந்துள்ள நிலையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சேதமடைந்துள்ள பணிகள் சீரமைக்க வேண்டியது உள்ளது. மண்ணரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. இதனை சரி செய்ய வேண்டு மென சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். தென்கரை குளத்தில் ஷட்டர்கள் பழுதால் வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பழுதடைந்த ஷட்டர்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், என்றார்.

பெரியவர் நட்டாத்தி நயினார் குலசேகரன் நீர்வள- நிலவளப் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் வரதை செல்வம் (எ)வெங்கடசுப்பிரமணியன் கூறுகையில், தென்கரை குளம் மட்டுமின்றி பெரும்பாலான குளங்கள் தூர்ந்து போயுள்ளன. குளத்தின் முழு கொள்ளளவில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கும்போது ஷட்டர்கள் சேதமடைகின்றன. எனவே குளங்களை தூர்வாரி அனைத்து ஷட்டர்களையும் பராமரிக்க வேண்டும், என்றார்.

கல் மண்டபம் புதுப்பிக்கப்படுமா?
தென்கரை குளத்தின் கரையில் பழங்கால கல் மண்டபம் பாழடைந்த நிலையில் உள்ளது. கல்மண்டபம் என்பது பழங்காலத்தில் வழிப்போக்கர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஆறு மற்றும் குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்டிருக்கும். குளத்தை முழுமையாக சீரமைக்கும்போது இந்த கல்மண்டபத்தையும் புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படும்
விவசாயிகளின் கோரிக்கை குறித்து நீர்வளத் துறையினர் கூறுகையில், மருதூர் மேலக்கால் தென்கரை குளத்தில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு நிரந்தர சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. ஷட்டரை சீரமைப்பதற்கு தேவையான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு குளத்தில் தண்ணீர் குறைந்ததும் பழுதடைந்துள்ள ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படும், என்றனர்.

The post வெள்ளமடம் தென்கரை குளத்தில் 10 ஷட்டர்கள் பழுதால் வீணாக வெளியேறும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: