முதல் போட்டியில் நியூசிலாந்து – பாக் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு ஆட இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்திய அணி மோதும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக் குழுவினர் அடுத்து வரும் நாட்களில் தீவிரம் காட்ட உள்ளனர். தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட குழுவினர் வரும் 12ம் தேதிக்குள், இந்திய அணிக்காக ஆடும் 15 வீரர்களை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் வீரர்கள் பட்டியலில் மாற்றம் செய்வதற்கு, பிப். 13ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்கும் அணிகள், 12ம் தேதிக்குள் தற்காலிக பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலில் மாற்றம் செய்ய நேர்ந்தால், பிப். 13ம் தேதி வரை அவகாசம் தரப்படும்’ என்றார். சாம்பியன்ஸ் கோப்பைக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள், வரும் 22ம் தேதி துவங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20, 3 ஒரு நாள் போட்டிகள் தொடரிலும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. ஆஸியுடனான தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவியபோதும், இங்கிலாந்து தொடர், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றிலும் இந்திய அணிக்கு கேப்டனாக அவரே செயல்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் உடல் நலன் சரியாக இருக்கும் பட்சத்தில், துணைத் தலைவராக பணியாற்றுவார் எனத் தெரிகிறது. தற்போது ஆஸியில் உள்ள இந்திய அணி வீரர்கள் ஓரிரு நாளில் இந்தியா புறப்பட உள்ளனர்.
The post சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அடுத்த இலக்கு? வீரர்களை தேர்வு செய்ய குழு தீவிரம் appeared first on Dinakaran.