இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2025ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. 1.1.2025 என்ற தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 29.10.2024 முதல் 28.11.2024 முடிய பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2025ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் இதனை பார்வையிடலாம். மேலும் பொதுமக்கள் //voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பார்த்துக் கொள்ளலாம். 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19,41,271 ஆண் வாக்காளர்கள், 20,09,975 பெண் வாக்காளர்கள், 1,252 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39,52,498 வாக்காளர்கள் இருந்தனர்.
2025ம் ஆண்டு சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக 96,504 நபர்கள் சேர்த்தல் தொடர்பாக மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன்படி, 45,134 ஆண்கள், 51,328 பெண்கள், 42 இதரர் என மொத்தம் 96,504 பேரிடம் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, துணை பட்டியல்களில் 44,974 ஆண் வேட்பாளர்கள், 51,168 பெண் வேட்பாளர்கள், 42 இதர வேட்பாளர்கள் என மொத்தம் 96,184 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது களஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 32,964 ஆகும். அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,804 ஆகும்.
மேலும், எந்த நபர்களும் வாக்காளர் பட்டியலில், தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணைய நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர் பட்டியலிலிருந்து இறந்துபோன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பலமுறை பட்டியல் பதிவுகள் ஆகிய பெயர்கள் தொடர் திருத்தம் மற்றும் சிறப்பு சுருக்க திருத்த காலங்களில் 32,804 நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 1752 பேர் இறந்தவர்கள், 30,717 பேர் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் 335 பேர் பலமுறை பட்டியலில் பதிவு செய்யப்பட்டவராவர். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,78,980 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,16,642 வாக்காளர்களும் உள்ளனர். நேற்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 19,70,279 ஆண் வாக்காளர்களும், 20,44,323 பெண் வாக்காளர்களும் மற்றும் 1,276 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 40,15,878 நபர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
* 1.60 சதவீதம் அதிகம்
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினைவிட 63,380 கூடுதல் என்றும், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைவிட 1.60 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்:
தொகுதி ஆண்
வாக்காளர்கள் பெண்
வாக்காளர்கள் 3ம் பாலின
வாக்காளர்கள் மொத்த
வாக்காளர்கள்
ஆர்.கே.நகர் 1,20,727 1,30,082 121 2,50,930
பெரம்பூர் 1,45,072 1,50,696 92 2,95,860
கொளத்தூர் 1,40,790 1,48,074 73 2,88,937
வில்லிவாக்கம் 1,19,733 1,24,730 65 2,44,528
திரு.வி.க.நகர் 1,08,105 1,14,547 75 2,22,727
எழும்பூர் 96,546 98,535 70 1,95,151
ராயபுரம் 96,217 1,00,745 73 1,97,035
துறைமுகம் 92,615 86,296 69 1,78,980
சேப்பாக்கம் /
திருவல்லிக்கேணி 1,17,597 1,22,180 63 2,39,840
ஆயிரம் விளக்கு 1,16,363 1,21,998 114 2,38,475
அண்ணாநகர் 1,37,140 1,43,248 102 2,80,490
விருகம்பாக்கம் 1,42,634 1,44,692 91 2,87,417
சைதாப்பேட்டை 1,34,153 1,39,382 88 2,73,623
தி.நகர் 1,15,975 1,19,588 53 2,35,616
மயிலாப்பூர் 1,30,527 1,39,055 45 2,69,627
வேளச்சேரி 1,56,085 1,60,475 82 3,16,642
மொத்தம் 19,70,279 20,44,323 1,276 40,15,878
The post சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 40.15 லட்சம் வாக்காளர்கள்: ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார் appeared first on Dinakaran.