அயர்லாந்து மகளிருடன் 3 ஓடிஐ: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்; 10ம் தேதி முதல் போட்டி துவக்கம்

ராஜ்கோட்: அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை வகிப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் செய்யவுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிருடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, வரும் 10ம் தேதி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடக்கும். 2வது மற்றும் 3வது ஒரு நாள் போட்டிகள் வரும் 12, 15 தேதிகளில் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளன. இந்திய மகளிர் அணிக்கு ஆல்ரவுண்டர் ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் அணியில் தீப்தி சர்மா (துணைக் கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஷ்ரா, தனுஷா கன்வர், டைட்டஸ் சாது, சைமா தாக்கூர், சயாலி சத்கரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னணி வீராங்கனைகள் ரேணுகா சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மகளிர் அணிக்கு கேபி லுாயிஸ் கேப்டனாக செயல்படுவார். தவிர, கிறிஸ்டினா கோல்டர் ரெல்லி, அலானா டேல்ஸெல், லாரா டெலானி, ஜார்ஜினா டெம்ஸே, சாரா போர்ப்ஸ், அர்லென் கெல்லி, ஜோன்னா லோக்ரான், அய்மீ மேகுயிர், லீ பால், ஒர்லா பிரெண்டர்காஸ்ட், உனா ரேமாண்ட் ஹோய், பிரேயா சார்ஜன்ட், ரெபெக்கா ஸ்டோகெல் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தாண்டில் அயர்லாந்து மகளிர் அணி முதன் முதலாக மோதும் இந்த போட்டித் தொடர், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக இருக்கும். ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அயர்லாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி மோதிய 21 போட்டிகளில் 3ல் வெற்றி, 16ல் தோல்வி அடைந்துள்ளது. அதே சமயம் அந்த அணி கடைசியாக வங்கதேசத்துடன் 3 டி20 போட்டிகளில் மோதி மூன்றிலும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள இந்தியா, தான் மோதிய 21 போட்டிகளில் 15 வெற்றி, 5 தோல்விகள் பெற்றுள்ளது.

The post அயர்லாந்து மகளிருடன் 3 ஓடிஐ: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்; 10ம் தேதி முதல் போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: