திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று காலை வந்தார். தொடர்ந்து மூலவரான முருகர், சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீண்ட நாட்களாக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். கடந்த மாதம் மழை வெள்ளத்தால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இப்போது வந்துள்ளேன். அமரன் படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதுபற்றி இங்கு பேச வேண்டாம் என முதலில் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், பின்னர், இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் நினைப்பும். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். இதுபோல் இனி நடக்காது என வேண்டுவோம். அதைத் தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன், என்றார். பின்னர் மதுரை சென்ற சிவகார்த்திகேயன், திருப்பரங்குன்றத்திலும் தொடர்ந்து பழநி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
The post பாதிக்கப்படும் பெண்கள் பக்கம் நாம் நிற்போம் அண்ணா பல்கலை விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி appeared first on Dinakaran.