வரும் 11ம் தேதி வரை நடைபெறும் மலர் கண்காட்சிக்கான நுழைவு சீட்டினை இணையதளத்தின் மூலமும் அல்லது செம்மொழிப் பூங்காவிற்கு நேரடியாக சென்றும் பெற்றுக்கொள்ளலாம். மலர்கண்காட்சியைக் காண சிறியவர்களுக்கு 25 ரூபாய் கட்டணமும், பெரியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. சென்னையில் 2022ம் ஆண்டு முதல் முறையாக கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. அதில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். 2023ம் ஆண்டு செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்ட நிலையில் 23 ஆயிரம் பேர் மட்டுமே பார்வையிட்டனர். 2024ம் ஆண்டு 3வது முறையாக கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
அதனால் ஆண்டுதோறும் மலர்கண்காட்சியை பார்வையிடும் மக்களின் கூட்டம் அதிகரிப்பதினால் செம்மொழி பூங்காவில் 4வது முறையாக மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்கண்காட்சியில் ஊட்டி, ஏற்காடு மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மலர்கள் கொண்டு வந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 800 வகையான சுமார் 30 லட்சம் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் மலர் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.
ஆண்டுதோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி போடப்படுவது வழக்கம் ஆனால் தற்போது சென்னையிலேயே மலர் கண்காட்சி போடப்படுவதால் ஊட்டிக்கு போகும் தேவையே கிடையாது என மக்கள் தெரிவித்துள்ளனர். வார விடுமுறை நாளையொட்டி நேற்று முன்தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் திரண்டு மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். பசுமை சூழலில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் பூக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த மலர் கணகாட்சியை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
The post செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்தது appeared first on Dinakaran.