சென்னை : சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் இந்தியாவில் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளில் ஒரு குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. ஹெச்.எம்.பி.வி. வைரஸ் குஜராத்தைச் சேர்ந்த 2 மாத குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு தெரிவிக்க குஜராத் அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே சளி, இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை எச்.எம்.பி.வி. அறிகுறிகளாக கருதப்படுகின்றன. எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்றும் HMPV வைரஸால் பாதிக்கப்படும் சிலருக்கு மூச்சிறைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை அறிகுறிகளாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. HMPV பெரும்பாலும் சிறு குழந்தைகள், பெரியவர்களை தாக்குவதாகவும், அது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தி உள்ளது.
The post சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி.. இந்தியாவில் 5 பேருக்கு பாதிப்பு; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.