சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யபப்ட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பலியாகினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று மனுக்கள் இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது; அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் வைப்பதால் என்ன பயன்? விஷச்சாராய விற்பனை என்பது பல வருடங்களாக அந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.
ஆனால் அதற்காக இருக்கும் மதுவிலக்குதுறை என்ன செய்து கொண்டிருக்கிறது’ எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கு, கல்வராயன் மலைக்கும் தொடர்பல்ல. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்று அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்; கைதானவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் appeared first on Dinakaran.