பந்தலூர்,ஜன.6: பந்தலூர் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையை பஜார் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பந்தலூர் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் முருகவேல், இந்திரஜித் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பந்தலூர் கூவமூலா சாலையில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடை பந்தலூர் பஜார் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தொலைவில் உள்ளது. இதனால் அந்த கடையில் மக்கள் பொருட்கள் வாங்க ஆட்டோக்களில் ஏறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் இலவச அரிசி வாங்கி அதனை சுமந்து செல்லும் ஆட்டோவுக்கு செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவின சுமை அதிகரித்து உள்ளது.
மேற்படி ரேஷன் கடை ஏற்கனவே பந்தலூர் புதிய பேருந்து நிலைய பகுதியில் செயல்பட்டு வந்தது. இது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்தது. ஆனால் தற்போது பஜாரில் இருந்து தொலைவாக அமைத்து உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மேற்படி ரேஷன் கடையை பந்தலூர் பஜார் பகுதியில் மாற்றிய அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
The post பந்தலூர் ரேஷன் கடையை பஜாருக்கு மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.