சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கடந்த 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28ம் தேதி வரை பெறப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69,000 வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது தவிர தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன் அடிப்படையில் 23.09 லட்சம் விண்ணப்பங்களின் பரிசீலனை கடந்தாண்டு டிச.24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்தன. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு ஆணையர் குமரகுருபரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
The post திருத்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.