போபால் விஷவாயு கசிவு கழிவுகளை எரிக்கும் மபி ஆலை மீது கல்வீசி தாக்குதல்: மக்கள் போராட்டத்தால் பதற்றம்

தார்: மத்தியப்பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போபாலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 5479 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆலையில் உள்ள 337 டன் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆலையில் இருந்த கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு பிதாம்பூரில் உள்ள தொழிற்சாலையில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. கழிவுகள் பிதாம்பூர் ஆலைக்கு நேற்று முன்தினம் வந்தடைந்த நிலையில் அந்த பகுதியில் போராட்டங்கள் வெடித்தது.

கழிவுகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்றனர். இவர்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். சுமார் 500 பேர் ஆலையை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆலையை சுற்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி வரை இது அமலில் இருக்கும். மேலும் போராட்டங்கள் தொடர்பாக போலீசார் ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட ஆலை அருகே திரண்டு நுழைவு வாயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

The post போபால் விஷவாயு கசிவு கழிவுகளை எரிக்கும் மபி ஆலை மீது கல்வீசி தாக்குதல்: மக்கள் போராட்டத்தால் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: