தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. பிரபல அணு விஞ்ஞானியான ராஜகோபால சிதம்பரம் வயது மூப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் நேற்று அதிகாலை 3.20 மணி அளவில் காலமானதாக அணுசக்தி துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1936ல் சென்னையில் பிறந்த ராஜகோபால சிதம்பரம், மாநிலக் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சில் (ஐஐஎஸ்சி) பிஎச்டி பட்டம் பெற்றார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான அவர் ராஜஸ்தானின் பொக்ரானில் 1974 மற்றும் 1998ம் ஆண்டுகளில் நடந்த அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றினார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் (1990-1993), அணுசக்தி ஆணையத்தின் தலைவர் (1993-2000), இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (2001-2018) என முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அணு சக்தி துறையில் சிறந்த சேவைக்காக 1975ல் பத்ம, 1999ல் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார். இந்தியாவுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கினார். இந்திய அணுசக்தி திட்டத்தின் மிகச்சிறந்த சிற்பியான சிதம்பரம், வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மரணம்: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: