சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் என 7 ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்படும். இப்பணிகளுக்காக 500 கோடியே 24 லட்சம் நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், சமுதாய கவுரவத்தையும் மேம்படுத்த இந்த சிறப்பு திட்டம் வழிவகுத்துள்ளது.
இப்பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், சீதாம்மாள் சாலையில், தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை தூர்வாரும் இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் படிந்துள்ள கசடுகளை நீக்கும் உயர்அழுத்த நீர்பாய்ச்சும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை முதல்வர் ஆய்வு செய்தபோது, அதனை தூய்மை பணியாளர்கள் இயக்கி காண்பித்தனர். பின்னர், அது தொடர்பான விவரங்களை தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, தூய்மை பணியாளர்களிடம் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை கையாளத் தெரியுமா? அதற்கு உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்றும், வாகனம் வாங்கிய பிறகு உங்களது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா, எரிபொருள், பராமரிப்பு, வங்கி தவணை தொகை உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் போக எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்றும், வாகனம் பழுதடைந்தால் எவ்வாறு சீர் செய்கிறீர்கள் என்றும், இரவு நேரங்களில் பணியாற்றுவது தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் போக மாதம் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு 500 கோடியில் நவீன வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் appeared first on Dinakaran.