மாநகராட்சி மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு 750 முதல் 800 வரை பிரசவங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 54,678 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 11,765 பேர் பாதிப்பு மிகுந்த கர்ப்பிணி தாய்மார்கள். சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் கருவுற்ற தாய்மார்களில் 30% பாதிப்பு மிகுந்த (அ) அதிக ஆபத்துள்ள தாய்மார்களாக கருதப்படுகிறார்கள். இவர்களை கண்காணிக்கும் வகையில் பாதிப்பு மிகுந்த (அ) அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கான நல உதவி மையம் அமைக்கப்படும் என மேயரின் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பாதிப்பு மிகுந்த கர்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை, ரிப்பன் மாளிகையில் நேற்று மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இந்த உதவி மையம் மூலமாக கருவுற்ற தாய்மார்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த உதவி மையத்தில் தொடர்பு கொள்ளும் பாதிப்பு மிகுந்த (அ) அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளின் விவரங்கள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ செவிலியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி தார்யமார்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் முறையான பரிசோதனை (ம) சிகிச்சை முறை பற்றி விளக்கிக் கூறி, அவர்கள் உரிய சிகிச்சை பெறுவதை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
மேலும், அவர்களின் பிரசவ நேரத்தில் சிறப்பு மருத்துவமனையில் பிரசவிக்கவும் அறிவுறுத்தப்படுவர். கர்ப்பக்கால நோய் கண்டறிதல் முதல், பிரசவம் (ம) பிரசவகால பின் கவனிப்புமுறை காலம் வரை தாய் மற்றும் சேய் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். இந்த கண்காணிப்பு மூலம் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் குறைக்கப்படும். கருத்தரித்த தாய் ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்க வழிவகுக்கும். மேலும், கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கான உணவுமுறை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் நோய்கள், சிக்கல்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், பிரசவகால நீரிழிவு நோய், இருதய நோய், வலிப்பு, ரத்த சோகை, ஆஸ்துமா, முந்தைய அறுவை சிகிச்சை, தைராய்டு, செயற்கை முறை கருத்தரிப்பு, 18 வயதிற்குள்ளாக மற்றும் 35 வயதிற்கு மேல் கருவுறுதல் உட்பட்ட முதல் கருத்தரிப்பு, இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட கருத்தரிப்பு, முந்தைய (அ) ஒன்றுக்கு மேற்பட்ட கருச்சிதைவு ஏற்பட்ட தாய்மார்கள் மற்றும் பல நோய்கள் பற்றிய சிக்கல்கள் கண்காணிக்கப்பட்டு அதற்கான தடுப்பு முறைகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விளக்கப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தாய்மார்கள் பெயர் பட்டியலினை (Picme) இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்து, அவர்கள் இம்மையத்தின் தொலைபேசியின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும் கர்ப்பிணிகளுக்கு உடல் உபாதைகள் ஏதேனும் தெரிவிக்கப்பட்டால் அத்தகவல் உரிய நகர சுகாதாரச் செவிலியருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்புகள் மற்றும் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி பங்கேற்றனர்.
The post தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் பாதிப்பு மிகுந்த, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கு நலஉதவி மையம்: ரிப்பன் மாளிகையில் திறக்கப்பட்டது appeared first on Dinakaran.