டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனால் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளத்தில் அதிகமாக நேரம் செலவிடுவதால் குழந்தைகளின் மனநிலை, கல்வி போன்றவை பாதிக்கப்படுவதாக கூறி 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் வரைவு விதிகளை கருத்து கேட்புக்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்க பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும் அதனை சம்மந்தப்பட்ட வலைத்தளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்புதலை சரிபார்க்க அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபட்டால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்படுவதை மேற்பார்வையிட ஒன்றிய அரசு தரவு பாதுகாப்பு வாரியத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் ஒழுங்கு முறை அமைப்பாக செயல்படும் வரைவு விதிகளில் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது பரிந்துரை வழங்க வேண்டும் என்றாலோ MyGov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு பிறகு கருத்துக்கள் பரீசீலிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடக கணக்கு தொடங்க நிபந்தனை: பெற்றோர் ஒப்புதல் தேவை என்று வரைவு விதி வெளியிட்ட ஒன்றிய அரசு appeared first on Dinakaran.