ஒட்டன்சத்திரம் அருகே பழங்கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு


ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட பொருளூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும், ஆசிரியருமான வீ.அரிஸ்டாட்டில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் மு.லெட்சுமணமூர்த்தி மற்றும் வாகை கோபாலகிருஷ்ணன் குழுவினர் பொருளூர் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான அய்யனார் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற சிற்பங்களை கண்டறிந்தனர். இந்த பழமையான சிற்பங்கள் குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பழங்கால பயன்பாட்டு கருவிகளில் ஒன்றான வளரியை தனது வலது கையில் பிடித்தபடி அய்யனார் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

தலைப்பகுதி அகன்ற ஜடாபாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலமும், மார்பில் ஆபரணங்களும், தோல்புஜங்களில் வளைவுகளும், கை, கால்களில் அணிகலன்கள் அணிந்தபடியும், இடையில் இடைக்கச்சை அணிந்தபடியும், இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி உட்குதியாசன கோலத்தில் அமர்ந்தநிலையில் இச்சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இடது காலையும், இடையையும் இணைக்கும்விதமாக யோகப்பட்டை இடம்பெற்றுள்ளது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியரின் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம்.

மேலும் ஒரு சண்டிகேஸ்வரர் சிற்பமும், திருமால் சிற்பமும், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரே காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். இவ்விடத்தில் பல்வேறு வகையான நடுகற்களும் காணப்படுகின்றன. அவற்றில் சதிகற்கள், வில்வீரன் சிற்பம், துப்பாக்கி வீரன் சிற்பம், உழவுத்தொழிலில் ஈடுபட்டதற்கான ஏர் கலப்பையுடன் கூடிய சிற்பம் போன்றவை ஒரே இடத்தில் குவிந்து கிடக்கின்றன. ஒரே இடத்தில் சிவன் கோயிலுக்கான சிற்பங்களும், நடுகற்களும் காணப்படுவதை பார்க்கும்போது வியப்பாக உள்ளது’’ என்றனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே பழங்கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: