பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ‘லிவ்-இன்’ ஜோடிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது: பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி


சண்டிகர்: பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ‘லிவ்-இன்’ ஜோடிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் ஜோடியாக வாழும் தம்பதிகள், தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கக் கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி சந்தீப் மவுட்கில், ‘லிவ்-இன் ஜோடியாக வாழும் தம்பதிகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. மனுதாக்கல் செய்த இருவரில் ஒருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது தவறு செய்பவர்களை ஊக்குவிக்கும் செயலாக மாறிவிடும். இந்தியாவின் தார்மீக விழுமியங்களை மோசமாக பாதிக்கும். அவர்களின் உறவினர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.

இத்தகைய மனுக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். அரசியலமைப்பின் 21வது பிரிவானது, ஒவ்வொரு குடிமகனும் அமைதியாகவும் கண்ணியமாகவும் வாழ உரிமை அளிக்கிறது. ஆனால் இந்த உரிமை சட்டத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். திருமணமான ஒருவர் லிவ்-இன் உறவில் நுழைவது சமூக கட்டமைப்பு மற்றும் தார்மீக விழுமியங்களுக்கு எதிரானது. அத்தகைய உறவுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது. இதுபோன்ற செயல்கள் திருமணமான நபரின் வாழ்க்கை உரிமை மற்றும் சுதந்திரத்தை மீறும் செயலாகும். இத்தகைய தம்பதிகள் குடும்பம் மற்றும் பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவார்கள். பெற்றோரின் உரிமைகளை மீறுவதாகும். திருமணம் என்பது புனிதமான மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த உறவு.

இரண்டு நபர்களுக்கிடையிலான உறவு மட்டுமல்ல, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் தார்மீக விழுமியங்களின் அடிப்படையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதால், இந்திய சமூகத்தில் குடும்ப மற்றும் கலாசார விழுமியங்களை மோசமாக பாதித்துள்ளது. லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வது என்ற நவீன வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வது என்பது நம்முடைய ஆழமான கலாசார வேர்களிலிருந்து விலகிச் செல்வதாகும். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணமான ஒருவர் விபசாரத்திற்கு பாதுகாப்பு பெற முடியாது என்று 1955ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய கலாசாரம் மேற்கத்திய கலாசாரத்திலிருந்து வேறுபட்டது. சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது முக்கியம். தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை சமூக கட்டமைப்பை அழிக்க தவறாகப் பயன்படுத்த முடியாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

The post பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ‘லிவ்-இன்’ ஜோடிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது: பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: