டெல்லி: எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது இல்லை. ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டியுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் குடிசைவாழ் மக்கள் மறுவாழ்வுக்காகக் கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். வீடுகளைச் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த பிறகு, பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை ஒப்படைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி; புதிதாக பிறந்துள்ள இந்த 2025ம் ஆண்டில் இந்தியா மேலும் வலுப்பெறும்.
இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். இந்த ஆண்டு, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகும் லட்சியத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் வேகமெடுக்கும். புதிய தொடக்கங்கள் மற்றும் தொழில்முனைவுகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ஆண்டாக இது இருக்கும். விவசாயத் துறையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைக்கும். பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்ற நமது மந்திரத்திற்கு புதிய உயரங்களை கொடுக்கும் ஆண்டாக இது அமையும்.
வாழ்க்கை வசதி மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் ஆண்டாக இது அமையும். எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது இல்லை. ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டியுள்ளேன். எனக்காக நான் மாளிகை கட்டியிருக்க முடியும். மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு. புதிய வீடுகளை பெறும் பயனாளிகளான நீங்கள் குடிசைவாசிகளை சந்திக்கும் போதெல்லாம், இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் பக்கா வீடுகள் கிடைக்கும் என்பதை என் சார்பாக உறுதியாக தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சில குழந்தைகளை சந்தித்தபோது, அவர்களின் கனவுகள் அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை விட உயர்ந்ததாக இருப்பதை என்னால் காண முடிந்தது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; வளர்ச்சியைப் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் நிதியை டெல்லி அரசு பாதியை கூட செலவிடவில்லை. டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. மதுக்கடைகளில் ஊழல், அரசுப்பள்ளிகளில் ஊழல் என பல வழிகளில் மோசடி நடந்து வருகிறது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்க முடிவு செய்துவிட்டனர் என்றும் கூறினார்.
The post எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது இல்லை: டெல்லியில் பிரதமர் மோடி உருக்கம்! appeared first on Dinakaran.