இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டுமானால் ரூ5,000 கொடுத்தால் போலி ஆதார் அட்டை: டெல்லியில் வங்கதேச தம்பதி, 2 புரோக்கர்கள் கைது

டெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டுமானால் ரூ5,000 கொடுத்தால் போலி ஆதார் அட்டை கிடைக்கும் என்ற நிலையில், டெல்லியில் வங்கதேச தம்பதி, 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச மக்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து டெல்லி இணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் ஜெயின் கூறுகையில், ‘டெல்லி போலீசார் இரண்டு வங்கதேச பிரஜைகளான பிலால் ஹொசைன் மற்றும் அவரது மனைவி சப்னா மற்றும் இரண்டு இந்திய பிரஜைகளான அமினூர் இஸ்லாம் மற்றும் ஆஷிஷ் மெஹ்ரா ஆகியோரை கைது செய்துள்ளது. வங்கதேச பிரஜைகளின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு இந்திய பிரஜைகள் இருவரும் உதவினர்.

அவர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார், பான் கார்டுகள், இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கதேசத்தின் துர்காபூர் மற்றும் மேகாலயாவின் பக்ராமா இடையேயான வன எல்லை வழியாக இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். இந்திய இடைத்தரகர்கள் அவர்களை அசாமில் உள்ள கிருஷ்ணாய் மற்றும் நியூ பொங்கைகான் ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் வழியாக ஊடுருவ வைத்துள்ளனர்.

இதற்காக இடைத்தரகர்களுக்கு ஒரு ஆதார் அட்டைக்கு 4,000 முதல் 5,000 ரூபாய் வரை வழங்கி உள்ளனர். கைது செய்யப்பட்ட பிலால் ஹோசன் கடந்த 2022ம் ஆண்டில் மேகாலயா-அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் தனது மனைவியுடன் ஊடுருவி டெல்லியில் குடியேறினார். இங்கு அழகுக்கலை ஷோரூம் நடத்தி வந்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார். முன்னதாக கடந்த டிசம்பரில், தெற்கு ரேஞ்ச் போலீசார் 12 வங்கதேச நபர்களை கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதேபோல் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக டெல்லியில் தங்கியிருந்த 31 ஆப்பிரிக்க நாட்டினரையும் போலீசார் நாடு கடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டுமானால் ரூ5,000 கொடுத்தால் போலி ஆதார் அட்டை: டெல்லியில் வங்கதேச தம்பதி, 2 புரோக்கர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: