×

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

நன்றி குங்குமம் தோழி

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம். அப்படிப்பட்ட மிகவும் கலைநயமான புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறது சென்னை போட்டோ பினாலே என்ற அமைப்பு (CPB). புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் அவர்களின் புகைப்படங்களை வரும் டிசம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை சென்னையில் பல முக்கிய இடங்களில் காட்சிக்காக வைக்க இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள் மற்றும் வருங்கால புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் சென்னையில் பல பகுதியினை அலங்கரிக்க உள்ளது.

இது குறித்து அமைப்பின் நிகழ்ச்சியின் மேலாளர் பிரியா புகைப்பட கண்காட்சி குறித்து விவரித்தார். ‘‘சென்னை போட்டோ பினாலே 2016ல் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்க அமைப்பின் முக்கிய நோக்கமே உலகளவில் உள்ள அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும் அங்கீகாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதுதான். அதன் வரிசையில் கடந்த மூன்று வருடமாக சென்னையில் புகைப்படத் திருவிழாவினை நிகழ்த்தி வருகிறோம்.

இந்த வருடம் இந்தத் திருவிழா டிசம்பர் மாதம் 20ம் தேதி துவங்கி அடுத்த வருடம் மார்ச் மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை இரண்டு கட்டமாக நடத்த இருக்கிறோம். அதாவது, முதல் கட்ட திருவிழா டிசம்பர் 20ம் தேதியும், இரண்டாவது கட்ட திருவிழா அடுத்த வருடம் ஜனவரி 17ம் தேதியில் இருந்து நடக்க இருக்கிறது. இதில் புகைப்படம் எதற்கு என்ற தலைப்பில் கலைஞர்கள் தங்களின் மாறுபட்ட புகைப்படங்களை மக்களின் பார்வைக்காக வைக்க இருக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் துவங்க இருக்கும் முதல் கட்ட விழாவில் ‘வான்னேரும் விழுதுகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 புகைப்பட கலைஞர்கள் ஜெய்சிங் நாகேஸ்வரன் தலைமையில் தங்களின் புகைப்படங்களை சென்னையில் உள்ள வி.ஆர். மால் வளாகத்தில் வைக்க இருக்கிறார்கள். மேலும் லலித் கலா அகாடமியில் பெண் புகைப்பட கலைஞர்கள் ‘பார்க்க… பார்க்கவும் இதுதான் சரியான நேரம்’ என்ற தலைப்பில் தங்களின் படைப்புகளை பார்வைக்காக வைக்கிறார்கள். இதில் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.

CPBயின் அழைப்பினை ஏற்று பிரபல புகைப்பட கலைஞர்களான அமர் ரமேஷ், சுஜாதா சங்கர் குமார் போன்றோர் தங்களின் புகைப்படங்களை சென்னையில் உள்ள நாரதகான சபா மற்றும் சரளா கலை மையத்தில் காட்சிக்காக வைக்க இருக்கிறார்கள். அவர்களின் கண்காட்சிக்கு வரும் வளரும் புகைப்பட கலைஞர்களுக்கும் இவர்கள் புகைப்பட நுணுக்கங்கள் குறித்து ஆலோசனையும் வழங்க இருக்கிறார்கள். இந்த வருடம் முதல் முறையாக ஓபன் கால் திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கிறோம். பொதுவாக இந்தத் திருவிழா புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களுக்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்தது.

வளரும் கலைஞர்கள் தங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட காரணத்தால், ஓபன் கால் திட்டம் மூலமாக அவர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறோம். இதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட தலைப்பும் கிடையாது. அவர்கள் எடுத்திருக்கும் புகைப்படங்களை எங்களின் இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் சிறந்த புகைப்படங்களை ஒன்பது பேர் கொண்டு உலகளவிய நடுவர் குழு தேர்வு செய்வார்கள். அந்தக் கலைஞர்கள் தங்களின் புகைப்படங்களை திருவிழாவில் காட்சிக்காக வைக்கலாம். இந்தத் திட்டத்தில் உலகளவில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம்.

மேலும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் என தனிப்பட்ட நபர் ஒருவரை நியமித்து இருக்கிறோம். அவரின் வேலை புகைப்பட கலைஞர்களை தேர்வு செய்வது, கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்ப புகைப்
படங்களை தேர்ந்தெடுப்பது, எத்தனை நாள் அந்தக் கண்காட்சியினை நடத்தலாம் என நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் அவர் அந்தந்த குழுவுடன் இணைந்து செயல்படுத்துவார். இவ்வாறு பல அம்சங்களை இந்த வருட புகைப்படத் திருவிழாவில் அமைத்திருக்கிறோம். மேலும் இந்தத் திருவிழா அனைவருக்குமானது என்பதால் சாதாரண மக்களும் பிரபல புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்களை கண்டு ரசிக்க இது நல்ல தருணம் என்றார்’’ பிரியா.

தொகுப்பு: ரிதி

The post கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா! appeared first on Dinakaran.

Tags : Kungumam Dozhi ,Chennai ,Photo Biennale ,CPB ,
× RELATED கஃபே ஸ்டைலில் ஃபேமிலி உணவகம்!