கடந்த 2020ம் ஆண்டு இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக டாக்டர் வேதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிக தலைவர் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை பேரையூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தீபிகா, மனு ஸ்மிருதியில் பெண்களை எவ்வாறு சித்தரித்து இருந்தார்கள் என்பது குறித்துதான் திருமாவளவன் பேசியுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனு ஸ்மிருதி புத்தகத்தைப் பற்றி புகார்தாரர் குறிப்பிடவில்லை. இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலை நடைமுறையை பார்க்கும்போது புகார்தாரரால் கூறப்பட்ட குற்றங்கள் எதுவும் மனுதாரர் செய்துள்ளதாக தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் மனுதாரருக்கு இல்லை என்பதையும், அவர் கருத்து யாரையும் பாதிக்கவில்லை என்பதையும், அவரது பேச்சு பொது மொழியில் மட்டுமே உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
The post மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்த கருத்து விவகாரம்; திருமாவளவன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.