திருவாடானை,ஜன.3: திருவாடானை அருகே சேதமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சம்பூரணி பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு இன்றளவும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் கடந்த 2012ம் ஆண்டு இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிப்பு பணியும் செய்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து மிகவும் சேதமடைந்ததால் தற்சமயம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகள் செல்லும் மாணவர்களும் தினசரி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வழியாக சாலையை கடந்து செல்லும்போது ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். ஆகையால் இந்த சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாடானை அருகே நீர்த்தேக்க தொட்டி கட்ட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.