×

வேர்களை தேடி திட்டத்தில் அயலக தமிழ் மாணவர்கள் 38 பேர் தமிழகம் வருகை: குமரியில் அமைச்சர் நாசர் வரவேற்றார்

கன்னியாகுமரி: தமிழக அரசு சார்பில் வேர்களை தேடி என்ற பெயரில் பண்பாட்டு பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், மாணவர்கள் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு புதுப்பிக்கும் வகையில் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு பண்பாட்டு சுற்றுலா அழைத்து வரப்படுவர். அவர்களுக்கு தமிழின் தொன்மை, வாழ்வியல் கலாச்சாரம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

தற்போது வரை 2 கட்டங்களாக 157 மாணவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 3ம் கட்டமாக உகாண்டா, நார்வே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 38 அயலக தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  அந்த மாணவர்கள் நேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டு பண்பாட்டு பயண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார்.

சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மாணவர்களை வரவேற்றார். இது குறித்து அமைச்சர் கூறுகையில், மாணவர்களை சென்னை,திருச்சி, மதுரை, குமரி, நெல்லைக்கு அழைத்து சென்று தமிழர்களின் கலாச்சாரம் குறித்து விளக்கப்பட உள்ளது. வருகிற 11, 12ம் தேதிகளில் சென்னையில் அயலக தமிழர்கள் தின விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கின்றனர் என்றார்.

The post வேர்களை தேடி திட்டத்தில் அயலக தமிழ் மாணவர்கள் 38 பேர் தமிழகம் வருகை: குமரியில் அமைச்சர் நாசர் வரவேற்றார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Nassar ,Kumari ,Kanyakumari ,Tamil Nadu government ,
× RELATED திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்