தற்போது அவரையும் மாற்றிவிட்டு கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவர் நியமிக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் நியமிக்கப்பட்டார். அப்போது அந்த நியமனத்துக்கும் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்குமரனால் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் நீடிக்க முடியவில்லை. இதனால் புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் ராமதாசின் மகள் வழி பேரன் முகுந்தன், கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் நடந்த பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த அன்புமணி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள். கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்குவீர்களா என்றெல்லாம் கேள்வி கேட்டவர், திடீரென மைக்கை மேஜை மீது போட்டார்.
அப்போது ராமதாசும், இது என்னுடைய கட்சி. நான் தொடங்கி, வளர்த்த கட்சி. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லாவிட்டால் போகலாம் என்றெல்லாம் தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் கடும் புகைச்சல் எழுந்தது. இந்தநிலையில் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டாம் என்று இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரும் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த மோதலுக்கிடையே கட்சியின் தலைவரான அன்புமணி, நேற்று முன்தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்களுடன், பனையூரில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை புதிய பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் முகுந்தனும் தனக்கு பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், அவருக்கு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அன்புமணி தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த மோதலுக்கு முக்கிய காரணம், அன்புமணியின் மருமகனுக்கு எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும் என்பதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது. அன்புமணியின் சகோதரி ஸ்ரீகாந்திக்கு சுகந்தன், முகுந்தன், ப்ரீத்திவன் என 3 மகன்கள் உள்ளனர். அதில் ப்ரீத்திவனுக்குத்தான் அன்புமணியின் மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் தனது மருமகனுக்கு முகுந்தன் போட்டியாக வருவாரோ என்ற அச்சத்தில்தான் அன்புமணி, ராமதாசின் முடிவை எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் தற்காலிகமாக முகுந்தனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை முகுந்தனும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
* எதிர்காலத்தில் தனது மருமகனுக்கு முகுந்தன் போட்டியாக வருவாரோ என்ற அச்சத்தில்தான் அன்புமணி, ராமதாசின் முடிவை எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
The post தந்தையுடன் மோதல் எதிரொலி 9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி திடீர் ஆலோசனை: மருமகனை சமாதானப்படுத்திய நிர்வாகிகள் appeared first on Dinakaran.