புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டுகளில் இசை நடன நிகழ்ச்சி, மது விருந்துடன் கொண்டாட்டம்: நடிகைகள், தொழிலதிபர்கள் விடிய விடிய உற்சாக நடனம்

சென்னை: 2025ம் ஆண்டு புத்தாண்டை பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக வரவேற்றனர். புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள், கிளப்புகளுக்கு இந்த ஆண்டு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் முதலே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைத்து நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசாட்டுகளில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் முன்பதிவு தொடங்கியது. இந்த முன்பதிவு குறைந்தது ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இருந்தது.

அதுவே 7 நட்சத்திர ஓட்டல்களில் இந்த கட்டணம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தது. சில இடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஜோடிகளை தவிர வேறு யாரையும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு நட்சத்திர ஓட்டல் மற்றும் ரிசாட்டு நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ரிசாட்டுகள், பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தையும் கடந்த மாதமே நடிகர்கள் மற்றும் நடிகைகள் புக் செய்து, இந்த புத்தாண்டை தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். சில ரிசாட்டுகளில் ‘டிஜிஎம்’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதில் சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலர் கலந்து கொண்டு நடனமாடினர். இந்த நிகழ்ச்சிகளுக்கு தான் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிகழ்ச்சியில் இசை நடனத்துடன் மது விருந்துகள் பரிமாறப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் முதல் இளைஞர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேநேரம் போலீசார் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர்.

இதனால் போலீசார் நள்ளிரவு 1 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளுக்கு சென்று கொண்டாட்டங்களை நிறுத்த வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து பல இடங்களில் 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சில இடங்களில் மது போதையில் இருந்த இளம் பெண்கள் மற்றும் நடிகைகள் பலர், நடக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்தனர். அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தனி வாகனங்களில் பாதுகாப்புடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசாட்டுகளில் போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா என்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அடிக்கடி ஆய்வு செய்தனர். கடந்த காலங்களை விட இந்த ஆண்டு நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசாட்டுகள், பண்ணை வீடுகளில் வெகுவிமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இதனால் கொரோனா காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகளில் அனைத்து அறைகளும் நிறைந்து காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டுகளில் இசை நடன நிகழ்ச்சி, மது விருந்துடன் கொண்டாட்டம்: நடிகைகள், தொழிலதிபர்கள் விடிய விடிய உற்சாக நடனம் appeared first on Dinakaran.

Related Stories: