டெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), 2024ல் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 80 வழக்குகளில் தொடர்புடைய பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 210 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக நக்சல் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையைாக 28 வழக்குகள் பதியப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டனர். இதே பிரிவில் 12 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு 64 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். வடகிழக்கு பிராந்திய கிளர்ச்சி சார்ந்த 18 வழக்குகள் பதியப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் 25 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 68 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. 408 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தீவிரவாதம், வன்முறை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடைய ரூ.19.57 கோடி மதிப்பிலான 137 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாடுகளில் இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் 101 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியிருந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தார்சிம் சிங் சாந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
2024ல் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 662 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சீன மற்றும் துருக்கி துப்பாக்கிகள், வெடி மருந்துகள், தோட்டாக்கள், டெட்டனேட்டர்கள், ரொக்கம், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 11 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் , 5 ஜம்மு-காஷ்மீர் ஜிகாதிகள், 24 பிற ஜிகாதிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளத்தில் பேராசிரியரின் கைகளை வெட்டிவிட்டு 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாவீத்தும் கைது செய்யப்பட்டார். சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 100 சதவீத தண்டனை விகிதத்தை உறுதிசெய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 2024ல் 662 ரெய்டுகளை நடத்திய என்ஐஏ: ஓராண்டில் 210 பேரை கைது செய்ததாக தகவல் appeared first on Dinakaran.