கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்…

நன்றி குங்குமம் டாக்டர்

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் அலெர்ட்!

பாப்பிலோமா வைரஸ் என்றால் என்ன..? ஏற்பட காரணம் என்ன?

பொதுவாக, தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளில் பலவகைகள் இருக்கின்றன. அதில் பேக்வோமா குடும்பத்தைச் சார்ந்தது இந்த பாப்பிலோமா வைரஸ். அதாவது, மனிதர்களைப் பாதிக்கும் சுமார் 200 வெவ்வேறு வகையான வைரஸ்களைக் கொண்ட ஒரு பெரிய குடும்பம். அதில், பாப்பிலோமா, பாலியோமா என்ற வகையைச் சார்ந்தது. இது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV ) என்று சொல்லப்படுகிறது. இந்த பாப்பிலோமா வைரஸ்( HPV) தொற்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (சர்விக்கல் கேன்சர்) ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இந்த வைரஸ் தொற்று 99 சதவீதம் பாலியல் தொடர்பால் பரவுகிறது.

இது உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது வந்து போகும். சிறியளவில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது தானாகவே குணமாகிவிடும். எனவே, பலருக்கு HPV தொற்று இருப்பதே தெரியாது. HPV பாதித்த ஒரு தாய், குழந்தையை பிரசவிக்கும்போது, குழந்தைக்கு வைரஸ் பரவுவது என்பது அரிதினும் அரிதான சந்தர்ப்பம் என்று மருத்துவ உலகில் பார்க்கப்படுகிறது. சிலருக்கு குணமாகாமல் உடலில் நீண்ட காலம் தங்கும்போது, நாளடைவில் இது கர்ப்பப்பைவாய் புற்றுநோயை உண்டாக்குகிறது. பிறப்புறுப்பு (ஆண் மற்றும் பெண் இருவரும்); மற்றும் எக்ஸ்ட்ராஜெனிட்டல் (வாய்வழி குழி, குரல்வளை) போன்றவற்றை பாதிக்கிறது.

எச்.பி.வியால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

இது தொற்றுநோய் கிருமி தாக்குதல் என்பதால், ஆரம்பத்தில் சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பப்பை வாய் புண், வெள்ளைப்படுதல், மாதவிடாய் நேரத்தில் வலி ஏற்படுவது போன்றவை இருக்கும். இது நீண்ட காலம் தொடரும்போது கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஏற்படுத்துகிறது. இது ஏற்படும்போது, உடலில் உள்ள டிஎன்.ஏவில் உள்ள ஜீன்ஸில் சில மாறுதலை ஏற்படுத்தும். பொதுவாக எந்த கேன்சராக இருந்தாலும், உடலில் ஏற்படும் ஜீன்ஸின் மாறுதல்களால்தான் ஏற்படுகிறது. பொதுவாக, உடலில் உள்ள டியுமரை வளராமல் தடுப்பதற்கு
353 ஜீன் மற்றும் ஆர்.பி. ஜீன் என இரண்டு ஜீன்கள் இருக்கிறது. அந்த ஜீனை கிருமிகள் தாக்கும்போது அந்த உறுப்பு செயலிழிந்து கேன்சராக மாறுகிறது. எனவே, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

சிகிச்சை முறைகள் என்பதற்கு முன்பு இதை எப்படி கண்டறியலாம் என்று சொல்கிறேன். கண்டுபிடிப்பதற்கான ஆரம்ப நிலை அறிகுறி என்றால், மாதவிடாய் நேரத்தில் வெள்ளைப்படுவது, தீட்டுப்படுவது என்பது நிகழ்ந்து முடிந்துவிடும். ஆனால், அதுவே, மாதவிடாய் முடிந்து அடுத்த மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைப்படுவதோ அல்லது ரத்தக் கசிவோ ஏற்படலாம். அல்லது பாலியலின்போது, ரத்தக் கசிவு ஏற்படலாம்.

அல்லது அந்த இடத்தில் துர்நாற்றம் ஏற்படுவது நீர் வடிதல், மலச்சிக்கல் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த அறிகுறிகளின் போது வலி இருக்காது. இது தீவிரமடையும்போதுதான் சிறுநீர் கழித்தலில் பிரச்னை ஏற்படுவது வலி ஏற்படுவது போன்றவை ஏற்படும்.

இதற்கு மாற்று சிகிச்சை இருக்கிறதா என்றால், பேப் ஸ்மியர் (Pap smear) என்ற டெஸ்ட்டின் மூலம் இந்த கேன்சரை தொடக்க நிலையிலேயே கண்டறியலாம். இது சரி செய்யக்கூடிய புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்கூட்டியே இருக்கின்ற மாறுதல்கள் வைத்தே இந்தப் புற்றுநோயைக் கண்டுபிடித்துவிடலாம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், முழு கர்ப்பப்பையும் எடுக்காமல், தொற்று பரவி இருக்கும் பாகத்தை மட்டும் அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். அடுத்த ஸ்டேஜுக்கு போகும்போது ஓபன் அறுவைசிகிச்சை மட்டும்தான் அளிக்கப்படுகிறது. கடந்த 4-5 ஆண்டுகள் முன்பு வரை லேப்ரோஸ்கோபி சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், லேப்ரோஸ்கோபி சிகிச்சை அவ்வளவாகப் பயனளிக்கவில்லை என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டபின், அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஸ்டேஜ் 3 என்று வரும்போது, வெளிப்புற கதிர்வீச்சு (ரேடியேஷன்) சிகிச்சை மற்றும் கீமோ சிகிச்சையும் தொடர்ந்து 6 வாரங்கள் அளிக்கப்படும். அதிலும் குணமாகவில்லை என்றால், உள் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். இதுபோன்று எல்லா ஸ்டேஜிலேயுமே குணப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. உலகத்திலுள்ள பல கேன்சர்களில் சில கேன்சர் முற்றிலும் தடுக்க முடியும். அந்த வகையில் ஒன்றுதான் பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் புற்றுநோய்.

இதற்கு தடுப்பூசி ஏதேனும் உள்ளதா.? எந்த வயதில் எடுத்துக் கொள்ளலாம்.? யார் எல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.?

டார்டாசில் என்ற தடுப்பூசி இருக்கிறது. இதை 9 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு 2 டோஸ்கள் வரை போட்டுக்கொள்ளலாம். முதல் டோஸ் செலுத்திய ஆறு மாதத்துக்குப் பிறகு அடுத்த டோஸ் செலுத்தப்படும். இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், அந்தப் பெண்கள் வருங்காலத்தில், இந்த எச்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள். இந்த தடுப்பூசியின் விலை 2 டோஸ்க்கு 8000 ரூபாய் வரை இருப்பதால், அரசாங்கம் இதனை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுக்க முடியவில்லை.

சமீபத்தில் இதற்காகவே இந்தியன் தடுப்பூசி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அது பரவலாகக் கிடைக்க தொடங்கிவிட்டால், தடுப்பூசியின் விலை குறைய வாய்ப்புள்ளது. அப்படி விலை குறைந்தால், பெண் குழந்தைகள் அனைவருக்கும், தற்போது போலியோ, பிபிடி தடுப்பூசிகள் போடுவது போன்று இலவசமாகவே வழங்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அப்படி கொண்டுவந்துவிட்டால், வருங்காலத்தில் பெண்களை பாதிக்கும் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வெகுவாக குறைந்துவிடும்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்னென்ன?

தற்காத்துக் கொள்ளும் வழிகளில் அதிமுக்கியமாகப் பார்க்கப்படுவது பாலியல் சேர்க்கைதான். எனவே, கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தாலே இந்த புற்றுநோய் வராமல் தடுத்துக் கொள்ளமுடியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது பாதியாக இந்த புற்றுநோய் பாதிப்பு கள் குறைந்துவிட்டது எனலாம். இதற்குக் காரணம், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டதும் ஒரு காரணம் ஆகும். இதைத் தவிர, தற்காத்துக்கொள்ளும் வழிகள் என்றால், 15 -45 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி இருக்கிறது. அவர்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.

அதுபோன்று, ஸ்கீரினிங் டெஸ்ட் செய்துகொள்ளலாம். அதாவது, திருமணம் முடிந்த 3 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுக்கு ஒருமுறை எந்தவித அறிகுறியும் இல்லை என்றாலும் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்து கர்ப்பப்பை சரியாகத்தான் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம். அடுத்தபடியாக, அறிகுறிகளில் ஏதேனும் ஒரு மாதத்துக்கு மேல் தென்பட்டால், தள்ளிப்போடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். இவற்றைச் செய்தாலே கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்… appeared first on Dinakaran.