நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இணைக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை: நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இணைப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில், நல்லக்கண்ணு நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது.

அப்பொழுது மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி; காலில் செருப்பு, தீபாவளி – பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். இதனால், நல்லக்கண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐயா நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். அதில், ”விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

The post நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இணைக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் appeared first on Dinakaran.

Related Stories: