×

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி

  • முகாம்கள், செயலிகள் மூலம் 20,846 பேர் விண்ணப்பம்
  •  தகுதியுடைய அனைவரின் பெயரும் சேர்க்க நடவடிக்கை
  •  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பெரம்பலூர், டிச.30: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா மாளிகையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஷோபனா தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் வட்டாட்சியர்கள், மற்றும் தேர்தல்கள் துணை வட்டாட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று (29 ஆம்தேதி) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்டக் கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் போது இளம் வாக்காளர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பான நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்கள் தொடர்பாக அமைக்கப் பட்டிருந்த சிறு புகைப்பட கண்காட்சியினையும், பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் சேர்ப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகள் தொடர்பாக மேற் கொண்டுள்ள பணிகள் குறித்து பவர் பாய்ண்ட் விளக்கக் காட்சிகள் மூலம் காண்பிக்கப்பட்டதையும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பார்வையிட்டார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்காக இதுவரை மேற்கொள்ளப் பட்டுள்ள பணிகள் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது :
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 2025 ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 2025 ஜனவரி 01ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த அக்-29 முதல், நவ- 28 வரை சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டு, வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் செயலிகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் கோரி விண்ணப்பித்த தகுதியான நபர்களின் 20,846 மனுக்கள் அனைத்தும் விடுபடாமல் 2025 ஜன- 6 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதையும், விண்ணப்பித்திருந்த நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், இளம் வாக்காளர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளை சிறப்பாக மேற் கொண்டுள்ள அலுவலர்களுக்கு பாராட்டுக்களையும், 2025 ஜன- 06 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியல் பணியினையும் அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல், தேர்தல் வட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கரான வருவாய் வட்டாட்சியர்கள், மற்றும் துணை வட்டாட்சியர் (தேர்தல்கள்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்து...