சேலம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவிஉயர்வு வழங்குவதற்கான விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணிமாறுதல் மூலம் 2025-2026ம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு நியமனம் செய்ய, தகுதி வாய்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது. எனவே, 01.01.2025ம் தேதியில் தகுதிபடைத்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் தொடர்பான விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தற்போதுள்ள பெயர்ப்பட்டியலில் தகுதியுள்ள தலைமையாசிரியர் பெயர் எதும் விடுபட்டிருப்பின், தலைமையாசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து, சிஇஓவின் விரிவான குறிப்புரையுடன் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களிடம் விருப்ப படிவத்தில் பதவி உயர்வுக்கு விருப்பம் அல்லது விருப்பமின்மையினை பெற்று, அதனை அவர்களது பணிப்பதிவேட்டில் பதிவுசெய்து, அதன் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் அசல் விருப்ப உரிமை படிவம் ஆகியவை அனுப்ப வேண்டும்.
பதவி உயர்வை தற்காலிகமாக உரிமைவிடல் செய்தவர்களில், தற்காலிக உரிமைவிடல் காலம் முடிவு பெற்றவர்களின் விவரங்கள் உரிய படிவத்தில் அனுப்பப்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்து, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றவர்களின் முன்னுரிமை, மேல்நிலைப்பள்ளி முன்னுரிமைப்படியே அமையும். முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் பணிபுரிந்து, பின்னாளில் பிற மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று சென்றிருப்பின் அவ்விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்.
இப்பட்டியலில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களின் பெயர்கள் எதுவும் இல்லையெனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் அனுப்ப வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சார்ந்த, சிஇஓக்களின் கருத்துருக்களை, வரும் 6, 7 மற்றும் 8ம் தேதிகளில், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும், 2025-2026ம் ஆண்டுக்கான மாவட்டக்கல்வி அலுவலர் முன்னுரிமைப் பெயர்ப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்படும் தலைமையாசிரியர்கள் தொடர்பான படிவத்தில் உள்ள அனைத்து காலங்களும், முதன்மைக்கல்வி அலுவரால் மட்டுமே பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
அந்த படிவத்துடன், தலைமை ஆசிரியர்களின் விருப்ப கடிதம், உரிய படிவம், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு சான்று நகல்கள் மற்றும் பி.எட்., பட்டப்படிப்புக்கான சான்றிதழ் நகல் மட்டும் இணைக்கப்பட வேண்டும். அத்துடன், தலைமை ஆசிரியரின் அசல் மந்தண அறிக்கைகள், தமிழ்நாடு குடிமுறைப் பணி விதியின் கீழ் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டிருப்பின், குற்றச்சாட்டின் நகல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை, மற்றும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கான ஆவணங்கள், பதவி உயர்வு, பணியிடமாறுதலுக்கு விருப்பம் மற்றும் விருப்பமின்மை தெரிவித்துள்ளவர்கள் சார்பாக பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்ட பதிவின் சான்றொப்பமிட்ட நகல்கள் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வரும் 2025-2026ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு: விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.