- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளுவர்
- புதிய ஆண்டு
- வள்ளுவம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- திமுக
- ஜனாதிபதி
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை: திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்கிறார். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் தலைவர் கலைஞர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்த தலைவர் கலைஞர், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப்படுத்தினார். குறள் நெறியை அனைத்து மக்களுக்கும் பரப்புகின்ற வகையில் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதியவர் அவர். இந்தியாவின் தென் எல்லையாக உள்ள தமிழ்நாட்டின் குமரி முனையில் உள்ள பாறையில் திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் 133 அடி உயரத்திற்கான சிலையை நிறுவி, அதனைப் புத்தாயிரம் ஆண்டான 1-1-2000 அன்று திறந்து வைத்தார்.
கலைஞர் நிறுவிய திருவள்ளுவர் சிலைக்கு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் இயற்கை ஒரு பெரும் சோதனையை உண்டாக்கியது. ஆழிப்பேரலை எனும் சுனாமியின் தாக்குதல் இந்தோனேஷியாவில் தொடங்கி, தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அந்த நேரத்தில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த கலைஞர் ஆழிப்பேரலையின் பாதிப்புகளை அறிந்ததும், “திருவள்ளுவர் சிலை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
கலைஞர் உருவாக்கிய தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களுக்கெல்லாம் வடிவம் கொடுத்த சிற்பி வை.கணபதி ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட குமரி முனை சிலையின் தலை வரை ஆழிப்பேரலை தாக்கிய போதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார் அய்யன் திருவள்ளுவர். காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது நம் திராவிட மாடல் அரசு. பொதுவாழ்வுக்கும் தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30 (இன்று), 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.
உயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும், அதற்கேற்ப வள்ளுவர் வழங்கிய திருக்குறளின் நெறி போற்றி நாம் வாழவேண்டும். விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம். அதன் வழி நடப்போம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
* கண்ணாடி பாலம் இந்தியாவிலேயே முதல்முறை
வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.
அதனை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பழமைக்குப் பழமையாய்-புதுமைக்குப் புதுமையாய் வள்ளுவம் திகழ்கிறது என்பதன் அடையாளமாக நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கவிருக்கிறேன். இனி சுற்றுலாப் பயணிகள் எளிதாக இரண்டு இடங்களுக்கும் சென்று வர முடியும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
The post திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்: வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.