ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனையே ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் ஆயிரத்து 500 வகையான சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியமிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை ஊட்டி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். வழக்கமாக மே மாத கோடை சீசனை முன்னிட்டு அனைத்து பூங்காக்களையும் தயார்படுத்தும் பணிகள் டிசம்பர் முதலே துவக்கப்படும். ரோஜா பூங்காவில் ஜனவரி மாத துவக்கத்தில் ரோஜா செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இதன் மூலம் ஏப்ரல் முதல் அனைத்து செடிகளிலும் வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும். ஒரே சமயத்தில் கவாத்து செய்யப்படும் போது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பூக்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதனை தவிர்க்கும் நோக்கில் முழுமையாக கவாத்து பணிகள் மேற்கொள்ளாமல் பூங்காவின் மேற்புறம் உள்ள பாத்திகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதியில் உள்ள பாத்திகளில் உள்ள ரோஜா செடிகள் கடந்த மாத இறுதியில் இருந்து கவாத்து செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் உரமிட்டு பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவை விரைவில் பூக்க துவங்கும். அடுத்த மாதம் இதர செடிகளும் கவாத்து செய்யப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
The post ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணி தீவிரம் appeared first on Dinakaran.