ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் களமாடும் காளைகளை அலங்கரிக்க கழுத்து மணி, சலங்கைகள் தயாரிப்பு

*சிவகங்கையில் பணிகள் மும்முரம்

சிவகங்கை : சிவகங்கையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் களமாடும் காளைகளை அலங்கரிக்க கழுத்து மணி, சலங்கைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தை மாதம் பிறந்தால் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா என களை கட்ட துவங்கும். தமிழர்களின் பாரம்பரியத்தை உலகத்திற்கே எடுத்துக்காட்டிய ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, போட்டிகளுக்கும் பஞ்சம் இருக்காது.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர், சிவகங்கை மாவட்டத்தில் சிறாவயல், கண்டுப்பட்டி, அரளிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆபரணங்களை அணிவித்து பார்ப்பதில் காளை வளர்ப்பவர்களுக்கு அலாதியான விருப்பம். அதிலும், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளைகள் போட்டிகளில் பங்கேற்கிறது என்றால், அவை அணிந்து வரும் ஆபரணங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளங்களே உள்ளது என்றால் மிகை ஆகாது.

சிவகங்கை அருகே ஒக்கூரில் காளைகளுக்காக பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் கழுத்துமணிகள். தோல்களால் ஆன கழுத்துப் பட்டைகள், அரியக்குடி மணி, நாகரத்த மணி, வெங்கல மணி, சில்வர் மணி, கால் சலங்கை, கழுத்து மணி, மூக்கு கயிறு, பிடி கயிறு, நெற்றிப்பட்டை, காது தோடு உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது.

இதில் நெற்றிப்பட்டை ரூ.350, கால் சலங்கை ரூ.1,000, கழுத்து சலங்கை ரூ.1,200 முதல் ரூ.5,000 வரை உள்ளது. மூக்கு கயிறு, பிடி கயிறு ரூ.300 முதல் ரூ.500 வரை உள்ளது. தை திருநாள் வர உள்ளதால் காளைகள் களத்தில் இறக்கும்போது சிவகங்கை மாவட்டத்திற்கு என்று தனி அடையாளம் கிடைக்கும். இந்த மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர் என வெளிமாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து மாடு வளர்ப்பவர்கள் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து ராசு கூறியதாவது, ‘‘கடந்த 26 ஆண்டுகளாக இந்த தொழிலை குடும்பத்துடன் செய்து வருகிறேன். எங்களிடம் ஆர்டர் சொன்னாலும் அதற்கேற்றார்போல் அளவுகளுடன் செய்து கொடுத்து வருகிறோம். இதனை காளைகளுக்கு அணிவிப்பதால் அதற்கென்று தனி கம்பீரம் கிடைக்கும். மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்தாண்டை விட இந்தாண்டு விலையில் சிறிய மாற்றம் இருக்கும். தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது’’, என்றார்.

The post ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் களமாடும் காளைகளை அலங்கரிக்க கழுத்து மணி, சலங்கைகள் தயாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: