கொடைக்கானல் : கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாட்டதிற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு கடந்த ஒரு வாரமாக அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. நேற்று வார விடுமுறை மற்றும் டிச.31 நள்ளிரவு புத்தாண்டை கொண்டாட சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஹவுஸ்புல் ஆனதுடன் அடுத்து வரும் நாட்களில் தங்கவும் புல் புக்கிங்கும் ஆகியுள்ளன. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் அதிரிப்பால் கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி, நகர் பகுதி மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் பல மணி நேரம் நெரிசல் நீடித்ததால் சுற்றுலாப்பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டபடி படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி சாலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சைக்கிள் ரைடிங் சென்றனர். பிரையண்ட் பூங்காவிலும் பல வண்ண மலர்களை கண்டு பரவசமடைந்ததும், அங்குள்ள புல் மைதானத்தில் அமர்ந்து இளைப்பாறினர்.
கொடைக்கானலில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவியில் நீர் பரவலாக கொட்டுகிறது. இங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post புத்தாண்டை கொண்டாட குவிந்தவர்களால் ‘ஃபுல் ரஷ்’ ஆனது கொடைக்கானல் appeared first on Dinakaran.