கடந்த நவ.16ம் தேதி அதிகாலையில் மேலப்பாளையம் தியேட்டரில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து மதுரை தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் பசீர் அப்பா தெருவை சேர்ந்த முகம்மது யூசுப் ரசீன், ஆசுரான் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகம்மது புகாரி (29) ஆகியோரை மேலப்பாளையம் போலீசார் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வந்தனர். இதனிடையே தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்கள், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் மதுரை தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணி வரை 2 மணி நேரம் இச்சோதனை நடைபெற்றது.
இதில் செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலப்பாளையம் முகம்மது அப்பா தெருவை சேர்ந்த பாஷா(47), மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவை சேர்ந்த சிராஜூதீன்(20) ஆகிய இருவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களது கூட்டாளி ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து மேலப்பாளையம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் இப்பகுதியில் நேற்று அதிகாலை முதலே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
The post தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேலப்பாளையம் தியேட்டரில் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது: செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.