ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கும், உள்நாட்டு துறைமுகங்களுக்கும் சிறு கப்பல்கள் மூலம் வாணிபம் செய்து வந்தனர். 1854ம் ஆண்டில் 80 அடி அகலத்தில் 4400 அடி நீளத்திற்கு சுமார் 14 அடி ஆழப்படுத்தப்பட்டதன் விளைவாக பாம்பன் கால்வாயில் பெரிய கப்பல்களும், போர் கப்பல்களும் பயணிக்கத் தொடங்கின. மேலும் வியாபார தொடர்பை விரிவாக்கும் வகையில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முயன்றனர்.
அதன் அடிப்படையில் பாம்பன் கடலிலும், தனுஷ்கோடி தலைமன்னார் இடையிலும் பாலம் அமைக்க திட்டமிட்டனர். அப்போதைய கவர்னர் ஜெனரல் நடத்திய ஆய்வில், பாலம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ‘டுவின் ரயில் பெரி சர்வீஸ்’ என்ற திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் இருந்து வரும் ரயிலை தனுஷ்கோடி வரை கொண்டு செல்வது, பின்னர் அந்த ரயிலின் எஞ்சினை தவிர்த்து மற்ற ரயில் பெட்டிகளை அப்படியே கப்பலுக்குள் இழுத்து செல்வது. ரயிலுடன் செல்லும் கப்பல் தலைமன்னாரில் மீண்டும் தரையிறக்கப்பட்டு எஞ்சின் பொருத்திய ரயிலாக இயக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கான திட்ட மதிப்பீடாக அன்றைய மதிப்பில் ரூ.229 லட்சம் என கூறப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கும் இங்கிலாந்து அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன் பின்னர்தான் பாம்பன் கடலின் மேலே ரயிலும், கீழே கப்பலும் செல்லும் வகையில் ‘டபுள் லீப் கேட்லீவர்’ முறையில் பாலம் கட்ட திட்டமிட்டனர். குறிப்பாக வர்த்தக போக்குவரத்திற்காக பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்குப் பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.
அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக 70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்கியது. கடந்த 1900களில் தொடக்க ஆண்டுகளில் பாலம் கட்டுவதற்கு அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. 1911ம் ஆண்டு பழைய பாம்பன் பாலம் கட்டும் பணி தொடங்கி 1914ம் ஆண்டு முடிவடைந்தது. 2.3 கிலோ மீட்டர் அளவில் அமைந்த பாம்பன் பாலம் கடல் மட்டத்தில் இருந்து 12 மீட்டர் உயரத்தில் அமைந்தது.
கடலுக்குள் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதன் 2 பகுதிகளிலும் 81 டிகிரி கோணத்தில் திறந்து மூடும் வகையிலான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டன. 1964ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி கடற்கரையில் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் துறைமுக பகுதிகள் முழுமையாக அழிந்தன. இதனால் தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்தும் அங்கிருந்து தலைமன்னார் சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த புயல் காரணமாக 124 தூண்கள் சேதமடைந்தன. அதனை 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர்.
பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற போது அதிர்வுகள் அதிகம் இருந்ததாக அபாய ஒலி எழுந்தது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை பாம்பன் தூக்கு பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் விபத்துகள் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கையாக, பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேதி குறிப்பிடாமல் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிறுத்தியது.
தற்போது பாம்பன் பழைய ரயில் பாலத்தையொட்டி நவீன புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்த நிலையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த புதிய பாம்பன் பாலத்தை பொறுத்தவரை அதன் வடிவமைப்பு நவீன தொழில் நுட்ப ரீதியாக பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாம்பன் பாலத்தின் இரண்டு ரயில் தண்டவாளங்கள் போடும் அளவிற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் முதல் கட்டமாக ஒரு வழித்தடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 333 தூண்களில் 99 இணைப்பு பகுதிகள் உள்ளன. தூக்கு பாலத்தின் மொத்த நீளம் 72 மீட்டர் ஆகும். தூக்குப்பாலம் முழுமையாக தூக்குவதற்கு 6 இன்டக்சன் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு 20 ஊழியர்கள் மூலம் பழைய பாம்பன் பாலம் தூக்க 45 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், தற்போது மொத்த பணிகளும் தானியங்கியாக 5 நிமிடங்களில் முடிவடைகிறது. கப்பல்கள் எளிதாக செல்லும் வகையில் செங்குத்து தூக்கு பாலம் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே நடுக்கடலில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. மேலும் புதிய ரயில் பாலம் திறப்புக்கு தயாராக உள்ளது. இதுதொடர்பாக புதிய பாம்பன் பாலம் கட்டமைப்பின் தலைமை ஆலோசகராக பணியாற்றிய அன்பழகன் கூறியதாவது:
பாம்பன் புதிய பாலம் கட்டுமானப் பணிக்கு 5,800 டன் துருப்பிடிக்காத ‘எக்கு’ இரும்பு மற்றும் 34 ஆயிரம் டன் சிமெண்ட், கற்கள் கொண்ட கான்ட்கிரிட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இரும்பில் துருப்பிடிக்கக் கூடாது என்பதற்காக ஜிங்க் முலாம் பூசப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்காத சில பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
குறிப்பாக தூக்கு பாலத்தின் கியர் பாக்ஸ் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 22 மீட்டர் உயரம் கொண்ட கப்பல்கள் இந்த பாலத்தின் வழியே கடக்க முடியும். சாலை பாலமும், தூக்கு பாலத்தின் உயரமும் ஒரே அளவு கொண்டது. தூக்கு பாலம் 660 டன் எடை கொண்டது. தானியங்கி தொழில் நுட்பம் மூலம் புதிய பாலத்தை 5 நிமிடத்தில் தூக்கிவிட
முடியும். மேலும் காற்றின் வேகத்தை அனிமா மீட்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது, மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சிக்னலை தானாகவே நிறுத்திவிடும். அதற்கேற்ப தொழில் நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் 80 கிலோ மீட்டரை தாண்டும் போது தூக்கு பாலம் இயங்காது. 6 மீட்டர் வரை உயரம் கொண்ட சிறிய படகுகள் தூக்கு பாலத்தின் கீழே எளிதாக செல்ல முடியும். பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி, ஒரு சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை அளித்திருந்தார். அது தற்போது சரி செய்யப்பட்டு ரயில் சேவைக்கு தயாராக உள்ளது. விரைவில் இந்த புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதற்காக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
* அதிவேகத்தில் ரயில்கள் இயக்கம்
புதிதாக திறக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம், ஆனால் 75 கிலோ மீட்டர் முதலில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய ரயில் பாலத்தில் 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.
* பழைய பாம்பன் பாலத்தின் நிலை
பழைய பாம்பன் பாலம் 2.3 கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இதன் தூண்கள் அனைத்தும் கடல் அரிப்பு ஏற்பட்டு பாலம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை முழுமையாக இடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தற்போது புதிய பாலம் திறக்கப்படும். பழைய பாலம் எவ்வாறு அகற்றப்படலாம் என ஆலோசிக்கப்பட்டு அதுக்குபிறகு முடிவு செய்யப்படும். முடிவெடுக்கப்பட்ட 3 மாதத்தில் அந்த பழைய பாலம் முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
* எதிர்கொண்ட பிரச்னைகள்
இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்கும் பணி 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. 350க்கும் மேற்பட்டவர்கள் இந்த பாலம் அமைக்க தொடர்ந்து பணியாற்றி வந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சவால்கள் எதிர்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பாக காலநிலை மாற்றத்தால் திடீர், மழை, காற்று, புயல் உள்ளிட்டவை ஏற்படும். இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தூக்கு பாலம் பொருட்களை தரையில் இருந்து, அமைக்கப்படும் இடத்திற்கு கொண்டு வர (500மீ) 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது. மேலும் கொரோனா காலத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன. இத்தகைய இடர்பாடுகளில் பாலத்தை கட்டி முடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
The post இந்தியாவில் முதல்முறையாக ரூ.550 கோடியில் நடுக்கடலில் அமைக்கப்பட்ட ரயில்வே தூக்கு பாலம்: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது, ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.