நெல்லை: நெல்லை மேலப்பாளையம் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் வீட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தீபாவளி பண்டிகையொட்டி அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மேலப்பாளையத்தில் அமரன் திரையிடப்பட்ட தியேட்டரில் கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி அதிகாலையில் மர்ம நபர்கள் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவம் இதுகுறித்து மதுரை தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, மேலப்பாளையம் பசீர்அப்பா தெருவை சேர்ந்த முகம்மது யூசுப் ரசீன், ஆசுரான் மேலத்தெருவை சேர்ந்த செய்யதுமுகம்மது புகாரி (29) ஆகியோரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் நெல்லை டவுனில் கடந்த 25ம் தேதி முன்விரோதம் காரணமாக ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் பெட்ேரால் குண்டுகள் வீசுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அமரன் திரையிடப்பட்ட தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் மதுரை தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ரமேஷ் கண்ணா தலைமையில் போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post நெல்லை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை appeared first on Dinakaran.