அம்பை : குமரிக் கடலில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு 2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை செய்து கல்லிடைக்குறிச்சி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.உலக பொதுமறையான திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் கடந்த 2000ம் ஆண்டில் ஜன.1ல் முன்னாள் முதல்வர் கலைஞர் 133 அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்பு செய்தார்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் துவங்குவதை தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் 25ம் ஆண்டு வெள்ளி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சரக்கல் தெருவைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சரவணன் சுமார் 2000 அரிசிகளைக் கொண்டு திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலை உணர்த்தும் வகையில் 3 இஞ்ச் உயரத்தில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், ‘ஓவியம் வரைவது, மாறுபட்ட வகையில் சிறு, சிறு சிற்பங்கள் செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலை ஆயிரம் அரிசிகளைக் கொண்டு 3 இஞ்ச் அகலம் 3 இஞ்ச் உயரத்தில் அமைத்தேன். இது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. எனது திறமையைப் பார்த்த அம்பை டிஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் அழைப்பின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் ஓவியம் வரைந்து கொடுத்தேன்.
கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் நிலையில் திருக்குறளில் உள்ள முப்பாலை உணர்த்தும் வகையிலும் 3 இஞ்ச் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை அமைத்து சாதனை புரிந்ததை பெருமையாக கருதுகிறேன். மாணவர்களுக்கு ஓவியம் வரைவது, சிற்பங்கள் செய்வது குறித்துக் கற்றுத் தந்துள்ளேன். மேலும் தாமிரபரணி பாதுகாப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட சமூக விழிப்புணர்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்’ என்றார்.
The post குமரியில் சிலை அமைத்து 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் 2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை appeared first on Dinakaran.