2026ல் மீண்டும் மக்கள் பாஜவை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்: சாட்டையடிக்கு பிறகு அண்ணாமலை பேட்டி


கோவை: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் 48 நாட்களுக்கு காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும், வீட்டுக்கு முன்பு எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்றும் வினோதமான போராட்டத்தை நேற்று அறிவித்தார். அதன்படி, கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே இன்று காலை 10 மணிக்கு காலில் செருப்பு அணியாமல் அண்ணாமலை வந்தார். பச்றை நிற துண்டு, வேட்டி அணிந்திருந்தார். இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட நூல்களால் பின்னப்பட்ட சாட்டையால் அவர் 8 முறை தன்னை அடித்துக் கொண்டார். அவர் ஏற்கனவே அறிவித்தது 6 முறைதான்.

இதில் 2 முறை சாட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டதால் 8 முறை அடித்துக்கொண்டார். அதன்பிறகு அண்ணாமலை அளித்தபேட்டி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு ஒன்றிய அரசு 7 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. எனவே பாஜ சார்பில் இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக கட்சி சார்பில் எந்த மாதிரியான போராட்டம் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும். இந்த சாட்டையடி போராட்டம் என்பது தமிழர் மரபு. முருகனிடம் வேண்டும்போது, காவடி எடுப்பதும், சாட்டை அடிப்பதும், ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வைக்கும் வேண்டுதல்.

அதைத்தான் நானும் இன்று செய்துள்ளேன். ஒரு வேளை நானே தவறு செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் உடலை வருத்தி நான் செய்த இந்த போராட்டம் எனக்கு பரிகாரமாக அமையட்டும். தமிழகத்தில் அறவழி போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. அதனால் தான் நான் இன்றைக்கு இந்த போராட்டத்தை நடத்தினேன். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். 2026ல் மீண்டும் எனக்கு (பாஜவுக்கு) மக்கள் தோல்வியை கொடுத்தாலும் அதையும் ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2026ல் மீண்டும் மக்கள் பாஜவை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்: சாட்டையடிக்கு பிறகு அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: