ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது: உதவியாளரும் சிக்கினார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஆவடி: ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்தது. இதில் அவரது உதவியாளரும் சிக்கினார். ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (30), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ஆன்லைன் பட்டா பெறுவதற்கு விண்ணப்பம் அளித்திருந்தார். பட்டா பெறுவதற்காக பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சுமன் (30) என்பவரை சந்திரன் அணுகியுள்ளார்.

சுமன் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் சந்திரனிடம் ரூ.15,000 லஞ்சம் கொடுத்தால்தான் உங்களுக்கு பட்டா வழங்க முடியும் என்று கூறியதால் சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுமனுக்கு கொடுக்குமாறு சந்திரனிடம் கூறியுள்ளனர்.

அதன்பேரில், சுமன் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளரான ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பொன்னையன் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சுமன் பணத்தை பெறும்படி பொன்னையனிடம் கூறியது உறுதியானது. இதனையடுத்து சுமன் மற்றும் பொன்னையன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது: உதவியாளரும் சிக்கினார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: