கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்: செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் நேற்று இயக்கப்பட்டது. இதில், சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணிப்பவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் அழகை கண்டு ரசித்து செல்வர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று மற்றும் வரும் 27,29,31 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
அதேபோல், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இன்று மற்றும் வரும் 28,30 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. முன்னதாக, நேற்று காலை ஊட்டி புறப்பட்ட சிறப்பு மலை ரயில் முன்பு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

 

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்: செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: