டாஸ்மாக் கடைகளில் பில் நடைமுறைக்கு பிறகும் பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூலிப்பதாக புகார்

* மதுபிரியர்கள் வாக்குவாதம்
* வைரலாகி வரும் வீடியோ

சென்னை : டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறை இருந்தும் ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக கடை ஊழியர்கள் வசூலிப்பதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, கூடுதல் வசூல் குறித்து கடை ஊழியரிடம் மது பிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிநாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் ஜனவரி முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செயல்படுகிறது. தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது.

குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துள்ளது.இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கூடுதல் பணம் வாங்கும் ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதை தொடர்ந்து, டாஸ்மாக் கணினிமயமக்கும் பணிகள் முடிந்து அரக்கோணம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில கடைகளில் பில் வழங்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மது வாங்குபவர்களுக்கு பில் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டும் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்ந்து வருவதாக மதுபிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில், பீர் வாங்க வந்த மது பிரியரிடம் ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் மது பிரியர் மற்றும் கடை ஊழியர் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் தகாத வார்த்தைகளையும் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக இருபது ரூபாய் வசூல் செய்யும் டாஸ்மாக் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post டாஸ்மாக் கடைகளில் பில் நடைமுறைக்கு பிறகும் பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூலிப்பதாக புகார் appeared first on Dinakaran.

Related Stories: