தமிழ்நாட்டிற்கு கேரள கழிவுகள் கொண்டுவருவது திருவனந்தபுரம் மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற நிறுவனம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து இங்கிருந்து கழிவுகளை 30 லாரிகளில் அப்புறப்படுத்தி சென்றது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் கேரள கழிவுகள் கொண்டுவரப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒரு வாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து கழிவுகள் கொண்டுவரப்படுவதால் குமரி – கேரள எல்லை பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க குமரி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் திருவனந்தபுரம் நகரத்தில் கழிவுகளை அகற்ற மாநகராட்சியின் அங்கீகாரம் பெற்று ஒப்பந்தம் எடுத்துள்ள சன் ஏஜ் எகோ சிஸ்டம் என்ற நிறுவனம்தான் இந்த செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் 7 நாட்களில் விளக்கம் அளிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ள நிலையில் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் இருந்து பிளாஸ்டிக் போன்ற கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும், சிமென்ட் கம்பெனிகளுக்கும் வழங்க சன் ஏஜ் எக்கோ சிஸ்டம் கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாநகராட்சிக்கு தெரியாமல் அந்த நிறுவனம் திருவனந்தபுரம் ஆர்சிசி மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு அவற்றின் கழிவுகளையும் குமரி மாவட்டத்திற்கும், நெல்லை மாவட்டத்திற்கும் கொண்டு வந்தவண்ணம் உள்ளன. இதனை திருவனந்தபுரம் மாநகராட்சி கண்டறிந்துள்ளது. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் குமரி – கேரள எல்லை பகுதிகள், நெல்லை எல்லை பகுதிகளில் கொண்டு வந்த பின்னர் சப் காண்ட்ராக்ட் வழங்கியுள்ள நிறுவன வாகனத்தில் கழிவுகள் மாற்றப்பட்டு பின்னர் குமரி, நெல்லை மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கழிவுகளை கொண்டுவந்து கொட்டும் வழக்கம் இருந்து வருகிறது.

* அங்கீகாரத்தை ரத்து செய்ய திட்டம்
கழிவுகளை சேகரிக்கவோ, அவற்றை அழிப்பதற்கோ எந்தவித அடிப்படை வசதியும் இந்த நிறுவனத்தில் இல்லை. இருப்பினும் கேரளா மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைப்பின் சான்றிதழ் போன்றவற்றையும் இந்த நிறுவனம் பெற்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கழிவுகளை கையாளுவதற்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ள இடம் என்றுகூறுகின்ற பகுதியில் ஒரு தகர ஷெட் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சேகரிக்கின்ற திருவனந்தபுரம் மாநகர பகுதியில் உணவு கழிவுகளும் இதனை போன்று குமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு என்று அனுப்பி வைக்கப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. எனவே விதிகளை மீறியுள்ளதால் அந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு கேரள கழிவுகள் கொண்டுவருவது திருவனந்தபுரம் மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற நிறுவனம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: